Monday, August 6, 2018

பஸ் புதிதுதான் பயணம் பாதுகாப்பானதா?

By - ப. இசக்கி | Published on : 06th August 2018 03:39 AM |



மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அண்மையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளதா என பல்வேறு தரப்புகளிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு இலக்காகும் இந்த பேருந்துகளின் உள்புறமும் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது என பயணிகளும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசானது அண்மையில் ரூ. 134.53 கோடியில் 515 புதிய பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகத்தில் இணைத்துள்ளது. இதில், படுக்கை வசதி, கழிப்பறை வசதி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 40 விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் அடங்கும். எஞ்சியவை அனைத்தும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் 8 மண்டலங்களுக்கும் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இம் மாத தொடக்கம் முதல் இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்துகளில் சில ஆங்காங்கே தொழில்நுட்பக் கோளாறுகளால் நடுவழியில் நிற்பதாக புகார்கள் எழுந்தன. நவீன தொழில்நுட்பங்களை கையாளத் தெரியாத சில ஓட்டுநர்களால் இப்பிரச்னை ஏற்படுவதாகவும், காலப்போக்கில் ஓட்டுநர்கள் அதில் அனுபவம் பெறும்போது எல்லாம் சரியாகிவிடும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சமாதானம் கூறி வருகின்றனர்.
இந்த புதிய பேருந்துகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் மட்டுமின்றி அதன் உள்புற கட்டமைப்பிலும் குறைபாடுகள் உள்ளதாகவும், அது பேருந்துகளில் பயணிப்போருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

பழைய பேருந்துகளை ஒப்பிடும்போது, இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து 57 பேர் பயணிக்க முடியும். புதிய பேருந்துகளில் மூவர் சேர்ந்து அமரும் ஒரு இருக்கையும், இருவர் சேர்ந்து அமரும் ஒரு இருக்கையும் குறைக்கப்பட்டு மொத்தம் 52 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதனால், இருக்கைகளில் அமர்ந்து பயணிப்போரின் கால்கள் முன் இருக்கையில் இடிக்காமல் பயணிக்கலாம். சில பழைய பேருந்துகளில் சராசரி உயரமுள்ள ஆண்களுக்கு கூட முன் இருக்கையில் முழங்கால் இடிக்கும் நிலை இருந்தது.

ஆனால், அதேவேளையில், இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இது சராசரி உயரமுள்ள ஆண்களுக்கு கூட அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் கூறுகின்றனர். மேலும், இருக்கைகள் முன்கவிழ்ந்தும், அதன் மேல் உறைகள் வழுவழுப்பாகவும் இருப்பதால் பிடிப்பு இருப்பதில்லை. பேருந்து இயக்கப்படும்போது ஓட்டுநர் லேசாக பிரேக் பிடித்தால்கூட இருக்கையில் இருக்கும் பயணிகள் நழுவி முன் இருக்கையில் இடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏதேனும் விபத்து நேரிட்டால் இருக்கையில் பிடிப்பு இன்றி பயணிகள் முன் இருக்கையில் முட்டி காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்கின்றர் பயணிகள்.

இதுமட்டுமல்ல, இரு பக்க இருக்கைகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இது, பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது. விபத்து நேரங்களில் பயணிகள் வேகமாக பேருந்தைவிட்டு வெளியேற வேண்டுமென்றால் இந்த இடைவெளி போதுமானதாக இல்லை. இதுவும் பேருந்துகளுக்கு உள்ளே உள்ள பயணிகளை வெகுவாக பாதிக்கும் என்பது போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினரின் கருத்து.

""புதிய பேருந்துகளில் சில நடத்துநர் இல்லாத "எண்ட் டு எண்ட்' (இடை நில்லா பேருந்துகள்) சேவையாக இயக்கப்படுகிறது. பஸ் புறப்படும் ஊரில் பயணிகளுக்கு பயணச்சீட்டை கொடுத்துவிட்டு நடத்துநர் இறங்கிவிடுவார்.
அனைத்து இருக்கைகளையும் நிரப்பிவிட்டு ஓட்டுநர் மட்டுமே பேருந்தை அடுத்த ஊருக்கு ஓட்டிச் செல்வார். இடையில் பேருந்து நிற்காது. பயணிகள் சேர வேண்டிய ஊர் நெருங்கும்போது புறநகர் பகுதிகளில் பேருந்து மெதுவாக செல்லும்போது ஓட்டுநருக்குத் தெரியாமல் சில பயணிகள் கதவைத் திறந்து கொண்டு இறங்குகின்றனர். கதவின் கட்டுப்பாடு ஓட்டுநரிடம் இல்லை.
இதனால் விபத்து ஏற்படலாம். அதற்கு ஓட்டுநரை பொறுப்பாக்கினால் எப்படி? சிலர் பயணச்சீட்டு வாங்காமலேயே பயணிகள் கூட்டத்தோடு பேருந்தில் ஏறிவிடுகின்றனர். பேருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு பயணச்சீட்டு கேட்கின்றனர்.

ஓட்டுநர் என்ன செய்ய முடியும்? பயணியிடம் பணத்தை ஓட்டுநர் பெற்று வைத்துக் கொள்வதும் விதிமுறை மீறலாகும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு என்ன?'' என கேட்கிறார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ. சார்பு) மாநில துணைத் தலைவர் வி. பிச்சை. இதுதொடர்பான வழக்கை நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது.
அரசு பேருந்துகளின் "பாடி' தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது எடை குறைவாக இருப்பதால் விபத்து நேர்ந்தால் அதிக சேதம், இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அரசின் புதிய பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு இணையாக 10,200 கிலோ எடையுடன் "பாடி' கட்டப்பட்டுள்ளதாக பேருந்துகளின் வெளிப்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பேருந்துகளின் வடிவமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்கின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

எனவே, சேவை நோக்கோடு செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துகளின் தரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



பல்கலைக்கழகம்தான் குற்றவாளி!


By ஆசிரியர் | Published on : 06th August 2018 03:33 AM |

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு பிரச்னை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. வலைப்பின்னல் போல ஒன்றன் பின் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளும் தவறுகளும் பொதுவெளியில் கசியத் தொடங்கியிருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியை உமா உள்பட மூன்று பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு பல காலமாக நடந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்வது என்பது இயலாத காரியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது ஏற்பட்டிருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைப்பது எளிதாக இருக்கப் போவதில்லை.

மதிப்பெண்ணுக்குப் பணம் என்கிற கீழ்த்தரமான நடவடிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு தெரியாமலோ, தொடர்பில்லாமலோ இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்தது என்பதை நம்ப முடியவில்லை. மிகவும் சாதுரியமாக மதிப்பெண்களை மாற்றி அதன் மூலம் பல கல்லூரிகளின் தேர்வு விகிதத்தை அதிகரித்து இடைத்தரகர்களின் உதவியுடன் பெரும் பணம் ஈட்டப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியலில் இருக்கும் முதல் 300 கல்லூரிகளில் அதிக அளவில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறையக்கூடும் என்கிற அச்சம் தரவரிசைப்பட்டியலில் முதல் 25 இடத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கே காணப்படும்போது, சாதாரண கல்லூரிகளுக்கு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். அதில்
தங்களது கமிஷனை எடுத்துக்கொண்டு இடைத்தரகர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குப் பிறகு இடைத்தரகர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டை முறைப்படி நடத்தி அதிகபட்ச மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இந்தப் பிரச்னையில் தேர்வு கட்டுப்பாட்டாளரும் பேராசியர்களும் கல்லூரிகளும் மட்டுமே குற்றவாளிகள் என்று கூறிவிட முடியாது.

 அண்ணா பல்கலைக்கழகமே விடைத்தாள் மறுமதிப்பீட்டை ஊக்கப்படுத்தும் நிலையில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படத்தான் செய்யும். கடந்த ஆறு ஆண்டுகளில் மறுமதிப்பீடு என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம்
மாணவர்களிடமிருந்து வசூலித்திருக்கும் தொகை சுமார் ரூ.90 கோடிக்கும் அதிகம். ஆண்டுதோறும் இது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என 2.5 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பொறியியல் இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருவாய் குறைகிறது. அதை ஈடுகட்ட பல்கலைக்கழகம் எடுக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் விடைத்தாள் மறுமதிப்பீடு.

ஒவ்வொறு பருவத்திலும் (செமஸ்டர்) தேர்வுக் கட்டணமாக 1.5 லட்சம் மாணவர்களிடமிருந்து தாளுக்கு ரூ.150 வீதம் ஆறு தாள்களுக்கு ரூ.900 எனக் கணக்கிட்டால், மொத்தம் ரூ.13.5 கோடி வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பாதிக்குப்பாதி பேர் தேர்ச்சி பெறுவதில்லை.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகல்களைப் பெற ஒரு தாளுக்கு ரூ.300 வீதம் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டும். சில கல்லூரிகளில் இதைவிடக் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படி பெறும் விடைத்தாள்களின் பல பக்கங்கள் திருத்தவே பட்டிருக்காது. திருத்தப்பட்டிருந்தாலும் மதிப்பெண் போடப்பட்டிருக்காது. மதிப்பெண் போடப்பட்டிருந்தாலும் அது மொத்த மதிப்பெண்ணில் கூட்டப்பட்டிருக்காது. குறைந்தது 40 விழுக்காடு மாணவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அண்ணா பல்கலைக்கழகத்தால் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகமே மறுமதிப்பீட்டின் மூலம் வருவாய் ஈட்ட முறைகேடாக முனையும்போது அதைப் பயன்படுத்தி பேராசிரியர்களும், இடைத்தரகர்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளும் முறைகேடாக பணம் ஈட்ட முற்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. திருத்தப்படாத, திருத்தப்பட்டிருந்தாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாத, மதிப்பெண்கள் வழங்கியிருந்தாலும் கூட்டப்படாத விடைத்தாளை சரிபார்த்த பேராசிரியர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இதுவரை இல்லை எனும்போது இந்த முறைகேட்டை அண்ணா பல்கலைக்கழகமே மறைமுகமாக ஊக்குவித்தது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே தமிழகத்தின் கல்வித்தரம் குறித்தும், தமிழக பொறியியல் மாணவர்களின் தரம் குறித்தும் மரியாதை குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிவந்திருக்கும் விடைத்தாள் மதிப்பீடு குறித்த முறைகேடு தமிழகத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் நடக்கவில்லை என்பது என்ன நிச்சயம்? இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு இனிமேலாவது விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்குவதை உறுதிப்படுத்தாமல் போனால் தமிழகத்தில் படித்து வெளிவரும் இளைஞர்களின் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மலிவு விலை மருந்தகங்கள் தேவை
By வெ.ந. கிரிதரன் | Published on : 06th August 2018 03:35 AM

இன்றைய நவீன உலகில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஒருவருக்கு இல்லையென்றால் அவர் கொடுத்து வைத்தவர் என சொல்லும் அளவுக்கு இந்த நோய்களுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மற்றும் முதிய வயதினரை மட்டுமின்றி இளைஞர்களைகூட தற்போது இவை விட்டுவைக்கவில்லை. நடுத்தர வயதினர் அல்லது வயோதிகர் இருவர் சந்தித்துக் கொள்ளும்போது, அவர்களுக்கு இடையேயான நல விசாரிப்பில், "உங்களுக்கு சுகர், பி.பி. இருக்கிறதா' என கேட்பது வழக்கமாகி விட்டது.

அலோபதி மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருமுறை வந்துவிட்டால் திரும்ப போகாது வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்பட வைக்கும் நீண்டகால நோய்களான ("குரோனிக் டிஸீஸ்') சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுக்குள் வைப்பதற்காக, இந்நோயாளிகள் தினந்தோறும் முறை தவறாமல் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.இதற்காக ஒருவர் தனது மாதாந்திர பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.1500 ஒதுக்க வேண்டியுள்ளது.

இந்த சூழலில்தான், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோரின் வாழ்நாள் சுமையான மருந்து, மாத்திரைகளின் செலவை குறைக்கும் நோக்கில், தமிழக அரசு "அம்மா மருந்தகங்க'ளையும், மத்திய அரசு "மக்கள் மருந்தகங்க'ளையும் நடத்தி வருகின்றன.

இவற்றில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளின் விலை, தனியார் , கார்ப்பரேட் மருந்தகங்களை ஒப்பிடும்போது மிக குறைவு என்பதால், அரசாங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால், அம்மா மருந்தகங்கள் மற்றும் மக்கள் மருந்தகங்கள் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், இம்மருந்தகங்களில் அனைத்து நேரங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான எல்லா மருந்துகளும் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தனியார் மருந்தகங்களில் மிக அதிக விலை கொடுத்து மாத்திரைகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக சாமானியர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மருந்து, மாத்திரைகள் விற்பனையின் மூலம் அரசாங்கத்துக்கு மாதாந்தோறும் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கொள்ளை லாபம் ஈட்டிவரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வருவாயைக் கைக்கொள்ளும் வகையிலும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதத்திலும், தற்போது மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கில் மட்டுமே உள்ள தமிழக அரசின் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரிக்க வேண்டும்.
பெருநகரங்கள் தொடங்கி, கிராமங்கள் வரை தெருவுக்கு தெரு "டாஸ்மாக்' கடைகளைத் திறந்து அவற்றை திறம்பட நடத்திவரும் அரசாங்கம் நினைத்தால், தனியார் மருந்தகங்களுக்குப் போட்டியாக அரசு மருந்தகங்களின் எண்ணிக்கையை கூட்டுவதொன்றும் பெரிய விஷயமில்லை.

இதன் முதல் கட்டமாக, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், கார்ப்பரேட் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தக பெயரிலான (பிராண்ட் நேம்) அதிக விலைக் கொண்ட மருந்து, மாத்திரைகளையே தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்காமல், இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேதி மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்ட, மலிவு விலையிலான "ஜெனரிக்' வகை மருந்து, மாத்திரைகளை பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், தனியார் மருத்துவமனைகளின் வளாகத்துக்குள் மருந்தகங்கள் செயல்படுவதற்கு தடைவிதிக்க வேண்டியதும் அவசியமாகும்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், அரசு மருந்தகங்களில் மலிவு விலையிலும் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கும், தனியார் மருந்தகங்களில் பெயர்கள் மாற்றப்பட்டு, பன் மடங்கு அதிக விலைக்கு விற்கப்படும் அதே மருந்து, மாத்திரைகளுக்கும் தரம், அளவு, வீரியம், செயல்திறன் உள்ளிட்ட காரணிகள் ஒன்றுதான் என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.

உதாரணமாக, காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஜெனரிக் வகை மாத்திரையான "பாராசிட்டமா'லும், தனியார் மருந்தகங்களில் "குரோசின்', "மெட்டாசின்', "பாராசின்' என பல்வேறு வர்த்தக பெயர்களில் (பிராண்ட் நேம்) அதிக விலைக்கு விற்கப்படும் மாத்திரைகளும் தரம், வீரியம், செயல்திறன் உள்ளிட்டவற்றில் ஒரே தன்மையைக் கொண்டவைதான்.

"பாராசிட்டமால்' 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை 2 ரூபாய் தான். இதுவே "குளோசின்', "மெட்டாசின்' போன்றவை ஓர் அட்டை 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் வெளிச்சந்தையில் மருந்து, மாத்திரைகளை எவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்தால் தலைசுற்றுகிறது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும், வலி நிவாரணத்துக்கும் வெளிச்சந்தையில் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கும் இந்த வரையறை பொருந்தும் என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும்.
தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் பல்வேறு படிநிலைகளில் செய்யும் செலவுகளை, மருந்து, மாத்திரைகளின் அதிக விலையிலான விற்பனை மூலம் ஈடு செய்கின்றன என்பதையும் மக்கள் உணர்ந்து, அரசின் ஒத்துழைப்புடன் மருந்து, மாத்திரைகளுக்கான கட்டண கொள்ளையிலிருந்து விடுபட வேண்டியது அவசியமாகும்.

அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அங்குள்ள சிகிச்சை நடைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அங்கு சென்று சிகிச்சை பெற விரும்பாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துமனைகளுக்கு சிகிச்சைப் பெற செல்வோருக்கு, மருந்து, மாத்திரைகளையாவது மலிவான விலையில் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.
ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்

Published : 05 Aug 2018 13:11 IST

மும்பை,



கோப்புப்படம்

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஒட்டுமொத்த அபராதத்தொகையில் பாதித் தொகையை எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளன.

30சதவீத அபராதத் தொகையை ஆக்சிஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் வசூலித்துள்ளன.

குறைந்த இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்காமல் நீண்டகாலம் இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதை எஸ்பிஐ வங்கி மீண்டும் அறிமுகம் செய்தது. அப்போது, குறைந்தபட்ச இருப்பு தொகையை முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு உயர்த்தியது.

ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையைக்குறைத்தது.


பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கிற்கான குறைதபட்ச இருப்பு தொகையை 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைத்தது. ஓய்வூதியதாரர்கள், மைனர்களின் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று மாற்றி அமைத்தது. கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அபராத முறை அறிமுகப்படுத்தப்பட்டு 8 மாதங்களில் அதாவது 2017-18 ஏப்ரல் முதல் 2018- ஜனவரி மாதம் வரை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து, ரூ.1,700 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், எச்டிஎப்சி வங்கி ரூ.590 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.530 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.317 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.211 கோடி என வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்துள்ளன.

இதில் எஸ்பிஐ வங்கி விதிக்கும் அபராத விகிதத்தைக் காட்டிலும், தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகள் விதிக்கும்அபராதத்தின் அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.
‘பிரதமர் நரசிம்மராவுடன் தம்பிதுரை பேசுவார்’- நாக்குத் தவறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published : 05 Aug 2018 15:43 IST
 



திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் நரசிம்மராவுடன் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என்று நாக்குத் தவறிக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

வேடசந்தூர் கல்வாரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, இங்குள்ள சுகாதார நிலையத்தை எம்.எல்.ஏ. பரமசிவமே திறந்து வைத்திருக்கலாம். நாங்களே தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தோம்.

தற்போது நாடாளுமன்ற் துணை சபாநாயகர் தம்பிதுரை பரமத்தி வேலூரில் பொதுமக்களைச் சந்தித்து குறைகேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு அவர் வருவா, மாலை புதுக்கோட்டை சென்று விடுவார்.

அதன் பின்னர் டெல்லி சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசுவார் என்று பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.

இதனையடுத்து பிரதமர் நரசிம்மராவா? என்ன இது? என்று சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தவறாகக் கூறுவது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே பிரதமர் மோடிக்குப் பதில் மன்மோகன் என்று கூறியிருக்கிறார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்குப் பதிலாக பாரதப் பிரதமர் எம்.ஜி.ஆர் என்று தவறாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் நரசிம்மராவ் என்று அவர் தவறாகக் குறிப்பிட்டது பேசுபொருளாகியுள்ளது.

'செஞ்சுரி' அடித்த பாட்டி : கொண்டாடிய உறவினர்கள்

Added : ஆக 06, 2018 00:54




விருத்தாசலம்: விருத்தாசலத்தில், 100 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடி, உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த கொள்ளுமாங்குடியைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். கணவர் இறந்து, 41 ஆண்டுகளான நிலையில், பிள்ளைகள் பராமரிப்பில் வசித்து வருகிறார். தற்போது, சுப்புலட்சுமி, 100 வயதை எட்டி உள்ளார். அவரது நுாறாவது பிறந்த நாளை, விமரிசை யாக கொண்டாட, குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலத் தில் உள்ள திருமண மண்டபத்தில் சுப்புலட்சுமிக்கு, நேற்று பிறந்த நாள் விழா நடந்தது. இரண்டு மகன்கள், மூன்று மகள்கள், ஒன்பது பேரன்கள், நான்கு பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள், 13 பேர் உட்பட உறவினர்கள் ஏராள மானோர் திரண்டு, கேக் வெட்டி, பாட்டியின் பிறந்த நாளை கொண்டாடினர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சுப்புலட்சுமி யிடம் ஆசி பெற்றனர்.
மாவட்ட செய்திகள்

புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் ‘வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்’





திருவாரூரில் தனது லாரியில் முட்டையிட்டு இருந்த புறா, குஞ்சு பொரிப்பதற்காக லாரியை அதன் உரிமையாளர் இயக்காமல் உள்ளார். தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரையில் காத்திருப்பேன் என்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 04:15 AM திருவாரூர்,

திருவாரூர் சேந்தமங்கலம் காவிரி நகரை சேர்்ந்தவர் சிங்காரவேலு. இவர் லாரிகள் வைத்து மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது ‘ஆன்லைன்’ மூலம் மணல் எடுப்பதால் சுழற்சி முறையில் இவருக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில் கால தாமதமானது. இதனால்் கடந்த மாதம் 13-ந் தேதி தனக்கு சொந்தமான லாரி ஒன்றை வீட்டின் அருகில் உள்ள சுப்பம்மாள் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்தி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 நாட்களுக்கு பின்னர் அதாவது 18-ந் தேதி இவருக்கு மணல் எடுப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை எடுப்பதற்காக டிரைவர் சென்றுள்ளார். அப்போது லாரியின் டீசல் டேங்க் அருகில் ஏர் பில்டர் மேல் பாதுகாப்பு கம்பி வளையத்தில் ஒரு புறா 2 முட்டைகளை இட்டு இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து டிரைவர், லாரி உரிமையாளர் சிங்கார வேலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சிங்காரவேலு, லாரி நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது புறா, அழகாக கட்டியிருந்த கூட்டில் முட்டைகள் இருப்பதை பார்த்தார். இதனையடுத்து லாரியை இயக்க வேண்டாம் என டிரைவரிடம் கூறினார். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது இரை தேடிச்சென்ற புறா, முட்டைகளை அடை காப்பதற்காக லாரியை சுற்றி, சுற்றி வந்தது.

இதனை கண்டதும் நெகிழ்ச்சியடைந்த சிங்காரவேலு, லாரியால் கிடைக்கும் வருமானம் தனக்கு பெரிதல்ல என்று முடிவு செய்து டிரைவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தினமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை போய் பார்த்து புறாவின் முட்டை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியில் வந்தது. கண் திறக்காமல் இருந்த அந்த புறா குஞ்சுகளை பாாத்து சிங்காரவேலு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தற்போது அந்த குஞ்சுகள் கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து வருகிறது.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சிங்காரவேலு கூறுகையில், உயிர் பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அவ்வாறுதான் புறா குஞ்சுகளை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட பரவாயில்லை. புறா குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து செல்லும் வரை லாரியை எடுக்காமல் காத்திருக்க போகிறேன். வருமானத்்தை விட இது எனக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது தான் உண்மை என தெரிவி்த்தார்.

கடை ஏழு வள்ளல்களில் பேகன் என்பவர் குளிருக்கு நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்ததாக வரலாறு. அந்த வழியில் புறாவிற்காக தனது லாரியை இயக்காமல் இருக்கும் சிங்காரவேலுவின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

NEWS TODAY 27.06.2026