பல்கலைக்கழகம்தான் குற்றவாளி!
By ஆசிரியர் | Published on : 06th August 2018 03:33 AM |
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு பிரச்னை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. வலைப்பின்னல் போல ஒன்றன் பின் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளும் தவறுகளும் பொதுவெளியில் கசியத் தொடங்கியிருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியை உமா உள்பட மூன்று பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு பல காலமாக நடந்து கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்வது என்பது இயலாத காரியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது ஏற்பட்டிருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைப்பது எளிதாக இருக்கப் போவதில்லை.
மதிப்பெண்ணுக்குப் பணம் என்கிற கீழ்த்தரமான நடவடிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு தெரியாமலோ, தொடர்பில்லாமலோ இத்தனை ஆண்டு காலமாக நடந்து வந்தது என்பதை நம்ப முடியவில்லை. மிகவும் சாதுரியமாக மதிப்பெண்களை மாற்றி அதன் மூலம் பல கல்லூரிகளின் தேர்வு விகிதத்தை அதிகரித்து இடைத்தரகர்களின் உதவியுடன் பெரும் பணம் ஈட்டப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியலில் இருக்கும் முதல் 300 கல்லூரிகளில் அதிக அளவில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறையக்கூடும் என்கிற அச்சம் தரவரிசைப்பட்டியலில் முதல் 25 இடத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கே காணப்படும்போது, சாதாரண கல்லூரிகளுக்கு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். அதில்
தங்களது கமிஷனை எடுத்துக்கொண்டு இடைத்தரகர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குப் பிறகு இடைத்தரகர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டை முறைப்படி நடத்தி அதிகபட்ச மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இந்தப் பிரச்னையில் தேர்வு கட்டுப்பாட்டாளரும் பேராசியர்களும் கல்லூரிகளும் மட்டுமே குற்றவாளிகள் என்று கூறிவிட முடியாது.
அண்ணா பல்கலைக்கழகமே விடைத்தாள் மறுமதிப்பீட்டை ஊக்கப்படுத்தும் நிலையில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படத்தான் செய்யும். கடந்த ஆறு ஆண்டுகளில் மறுமதிப்பீடு என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம்
மாணவர்களிடமிருந்து வசூலித்திருக்கும் தொகை சுமார் ரூ.90 கோடிக்கும் அதிகம். ஆண்டுதோறும் இது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என 2.5 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பொறியியல் இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருவாய் குறைகிறது. அதை ஈடுகட்ட பல்கலைக்கழகம் எடுக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் விடைத்தாள் மறுமதிப்பீடு.
ஒவ்வொறு பருவத்திலும் (செமஸ்டர்) தேர்வுக் கட்டணமாக 1.5 லட்சம் மாணவர்களிடமிருந்து தாளுக்கு ரூ.150 வீதம் ஆறு தாள்களுக்கு ரூ.900 எனக் கணக்கிட்டால், மொத்தம் ரூ.13.5 கோடி வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பாதிக்குப்பாதி பேர் தேர்ச்சி பெறுவதில்லை.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகல்களைப் பெற ஒரு தாளுக்கு ரூ.300 வீதம் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டும். சில கல்லூரிகளில் இதைவிடக் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படி பெறும் விடைத்தாள்களின் பல பக்கங்கள் திருத்தவே பட்டிருக்காது. திருத்தப்பட்டிருந்தாலும் மதிப்பெண் போடப்பட்டிருக்காது. மதிப்பெண் போடப்பட்டிருந்தாலும் அது மொத்த மதிப்பெண்ணில் கூட்டப்பட்டிருக்காது. குறைந்தது 40 விழுக்காடு மாணவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அண்ணா பல்கலைக்கழகத்தால் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகமே மறுமதிப்பீட்டின் மூலம் வருவாய் ஈட்ட முறைகேடாக முனையும்போது அதைப் பயன்படுத்தி பேராசிரியர்களும், இடைத்தரகர்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளும் முறைகேடாக பணம் ஈட்ட முற்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. திருத்தப்படாத, திருத்தப்பட்டிருந்தாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாத, மதிப்பெண்கள் வழங்கியிருந்தாலும் கூட்டப்படாத விடைத்தாளை சரிபார்த்த பேராசிரியர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இதுவரை இல்லை எனும்போது இந்த முறைகேட்டை அண்ணா பல்கலைக்கழகமே மறைமுகமாக ஊக்குவித்தது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே தமிழகத்தின் கல்வித்தரம் குறித்தும், தமிழக பொறியியல் மாணவர்களின் தரம் குறித்தும் மரியாதை குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிவந்திருக்கும் விடைத்தாள் மதிப்பீடு குறித்த முறைகேடு தமிழகத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் நடக்கவில்லை என்பது என்ன நிச்சயம்? இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு இனிமேலாவது விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்குவதை உறுதிப்படுத்தாமல் போனால் தமிழகத்தில் படித்து வெளிவரும் இளைஞர்களின் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
No comments:
Post a Comment