Monday, August 6, 2018

மலிவு விலை மருந்தகங்கள் தேவை
By வெ.ந. கிரிதரன் | Published on : 06th August 2018 03:35 AM

இன்றைய நவீன உலகில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஒருவருக்கு இல்லையென்றால் அவர் கொடுத்து வைத்தவர் என சொல்லும் அளவுக்கு இந்த நோய்களுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மற்றும் முதிய வயதினரை மட்டுமின்றி இளைஞர்களைகூட தற்போது இவை விட்டுவைக்கவில்லை. நடுத்தர வயதினர் அல்லது வயோதிகர் இருவர் சந்தித்துக் கொள்ளும்போது, அவர்களுக்கு இடையேயான நல விசாரிப்பில், "உங்களுக்கு சுகர், பி.பி. இருக்கிறதா' என கேட்பது வழக்கமாகி விட்டது.

அலோபதி மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருமுறை வந்துவிட்டால் திரும்ப போகாது வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்பட வைக்கும் நீண்டகால நோய்களான ("குரோனிக் டிஸீஸ்') சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுக்குள் வைப்பதற்காக, இந்நோயாளிகள் தினந்தோறும் முறை தவறாமல் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.இதற்காக ஒருவர் தனது மாதாந்திர பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.1500 ஒதுக்க வேண்டியுள்ளது.

இந்த சூழலில்தான், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோரின் வாழ்நாள் சுமையான மருந்து, மாத்திரைகளின் செலவை குறைக்கும் நோக்கில், தமிழக அரசு "அம்மா மருந்தகங்க'ளையும், மத்திய அரசு "மக்கள் மருந்தகங்க'ளையும் நடத்தி வருகின்றன.

இவற்றில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளின் விலை, தனியார் , கார்ப்பரேட் மருந்தகங்களை ஒப்பிடும்போது மிக குறைவு என்பதால், அரசாங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால், அம்மா மருந்தகங்கள் மற்றும் மக்கள் மருந்தகங்கள் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், இம்மருந்தகங்களில் அனைத்து நேரங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான எல்லா மருந்துகளும் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தனியார் மருந்தகங்களில் மிக அதிக விலை கொடுத்து மாத்திரைகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக சாமானியர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மருந்து, மாத்திரைகள் விற்பனையின் மூலம் அரசாங்கத்துக்கு மாதாந்தோறும் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கொள்ளை லாபம் ஈட்டிவரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வருவாயைக் கைக்கொள்ளும் வகையிலும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதத்திலும், தற்போது மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கில் மட்டுமே உள்ள தமிழக அரசின் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரிக்க வேண்டும்.
பெருநகரங்கள் தொடங்கி, கிராமங்கள் வரை தெருவுக்கு தெரு "டாஸ்மாக்' கடைகளைத் திறந்து அவற்றை திறம்பட நடத்திவரும் அரசாங்கம் நினைத்தால், தனியார் மருந்தகங்களுக்குப் போட்டியாக அரசு மருந்தகங்களின் எண்ணிக்கையை கூட்டுவதொன்றும் பெரிய விஷயமில்லை.

இதன் முதல் கட்டமாக, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், கார்ப்பரேட் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தக பெயரிலான (பிராண்ட் நேம்) அதிக விலைக் கொண்ட மருந்து, மாத்திரைகளையே தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்காமல், இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வேதி மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்ட, மலிவு விலையிலான "ஜெனரிக்' வகை மருந்து, மாத்திரைகளை பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், தனியார் மருத்துவமனைகளின் வளாகத்துக்குள் மருந்தகங்கள் செயல்படுவதற்கு தடைவிதிக்க வேண்டியதும் அவசியமாகும்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், அரசு மருந்தகங்களில் மலிவு விலையிலும் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கும், தனியார் மருந்தகங்களில் பெயர்கள் மாற்றப்பட்டு, பன் மடங்கு அதிக விலைக்கு விற்கப்படும் அதே மருந்து, மாத்திரைகளுக்கும் தரம், அளவு, வீரியம், செயல்திறன் உள்ளிட்ட காரணிகள் ஒன்றுதான் என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.

உதாரணமாக, காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஜெனரிக் வகை மாத்திரையான "பாராசிட்டமா'லும், தனியார் மருந்தகங்களில் "குரோசின்', "மெட்டாசின்', "பாராசின்' என பல்வேறு வர்த்தக பெயர்களில் (பிராண்ட் நேம்) அதிக விலைக்கு விற்கப்படும் மாத்திரைகளும் தரம், வீரியம், செயல்திறன் உள்ளிட்டவற்றில் ஒரே தன்மையைக் கொண்டவைதான்.

"பாராசிட்டமால்' 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை 2 ரூபாய் தான். இதுவே "குளோசின்', "மெட்டாசின்' போன்றவை ஓர் அட்டை 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் வெளிச்சந்தையில் மருந்து, மாத்திரைகளை எவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்தால் தலைசுற்றுகிறது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும், வலி நிவாரணத்துக்கும் வெளிச்சந்தையில் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளுக்கும் இந்த வரையறை பொருந்தும் என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும்.
தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் பல்வேறு படிநிலைகளில் செய்யும் செலவுகளை, மருந்து, மாத்திரைகளின் அதிக விலையிலான விற்பனை மூலம் ஈடு செய்கின்றன என்பதையும் மக்கள் உணர்ந்து, அரசின் ஒத்துழைப்புடன் மருந்து, மாத்திரைகளுக்கான கட்டண கொள்ளையிலிருந்து விடுபட வேண்டியது அவசியமாகும்.

அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அங்குள்ள சிகிச்சை நடைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அங்கு சென்று சிகிச்சை பெற விரும்பாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துமனைகளுக்கு சிகிச்சைப் பெற செல்வோருக்கு, மருந்து, மாத்திரைகளையாவது மலிவான விலையில் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024