Monday, August 6, 2018

பஸ் புதிதுதான் பயணம் பாதுகாப்பானதா?

By - ப. இசக்கி | Published on : 06th August 2018 03:39 AM |



மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அண்மையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளதா என பல்வேறு தரப்புகளிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு இலக்காகும் இந்த பேருந்துகளின் உள்புறமும் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது என பயணிகளும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசானது அண்மையில் ரூ. 134.53 கோடியில் 515 புதிய பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகத்தில் இணைத்துள்ளது. இதில், படுக்கை வசதி, கழிப்பறை வசதி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 40 விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் அடங்கும். எஞ்சியவை அனைத்தும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் 8 மண்டலங்களுக்கும் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இம் மாத தொடக்கம் முதல் இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்துகளில் சில ஆங்காங்கே தொழில்நுட்பக் கோளாறுகளால் நடுவழியில் நிற்பதாக புகார்கள் எழுந்தன. நவீன தொழில்நுட்பங்களை கையாளத் தெரியாத சில ஓட்டுநர்களால் இப்பிரச்னை ஏற்படுவதாகவும், காலப்போக்கில் ஓட்டுநர்கள் அதில் அனுபவம் பெறும்போது எல்லாம் சரியாகிவிடும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சமாதானம் கூறி வருகின்றனர்.
இந்த புதிய பேருந்துகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் மட்டுமின்றி அதன் உள்புற கட்டமைப்பிலும் குறைபாடுகள் உள்ளதாகவும், அது பேருந்துகளில் பயணிப்போருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

பழைய பேருந்துகளை ஒப்பிடும்போது, இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து 57 பேர் பயணிக்க முடியும். புதிய பேருந்துகளில் மூவர் சேர்ந்து அமரும் ஒரு இருக்கையும், இருவர் சேர்ந்து அமரும் ஒரு இருக்கையும் குறைக்கப்பட்டு மொத்தம் 52 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதனால், இருக்கைகளில் அமர்ந்து பயணிப்போரின் கால்கள் முன் இருக்கையில் இடிக்காமல் பயணிக்கலாம். சில பழைய பேருந்துகளில் சராசரி உயரமுள்ள ஆண்களுக்கு கூட முன் இருக்கையில் முழங்கால் இடிக்கும் நிலை இருந்தது.

ஆனால், அதேவேளையில், இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இது சராசரி உயரமுள்ள ஆண்களுக்கு கூட அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் கூறுகின்றனர். மேலும், இருக்கைகள் முன்கவிழ்ந்தும், அதன் மேல் உறைகள் வழுவழுப்பாகவும் இருப்பதால் பிடிப்பு இருப்பதில்லை. பேருந்து இயக்கப்படும்போது ஓட்டுநர் லேசாக பிரேக் பிடித்தால்கூட இருக்கையில் இருக்கும் பயணிகள் நழுவி முன் இருக்கையில் இடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏதேனும் விபத்து நேரிட்டால் இருக்கையில் பிடிப்பு இன்றி பயணிகள் முன் இருக்கையில் முட்டி காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்கின்றர் பயணிகள்.

இதுமட்டுமல்ல, இரு பக்க இருக்கைகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இது, பேருந்துகளில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது. விபத்து நேரங்களில் பயணிகள் வேகமாக பேருந்தைவிட்டு வெளியேற வேண்டுமென்றால் இந்த இடைவெளி போதுமானதாக இல்லை. இதுவும் பேருந்துகளுக்கு உள்ளே உள்ள பயணிகளை வெகுவாக பாதிக்கும் என்பது போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினரின் கருத்து.

""புதிய பேருந்துகளில் சில நடத்துநர் இல்லாத "எண்ட் டு எண்ட்' (இடை நில்லா பேருந்துகள்) சேவையாக இயக்கப்படுகிறது. பஸ் புறப்படும் ஊரில் பயணிகளுக்கு பயணச்சீட்டை கொடுத்துவிட்டு நடத்துநர் இறங்கிவிடுவார்.
அனைத்து இருக்கைகளையும் நிரப்பிவிட்டு ஓட்டுநர் மட்டுமே பேருந்தை அடுத்த ஊருக்கு ஓட்டிச் செல்வார். இடையில் பேருந்து நிற்காது. பயணிகள் சேர வேண்டிய ஊர் நெருங்கும்போது புறநகர் பகுதிகளில் பேருந்து மெதுவாக செல்லும்போது ஓட்டுநருக்குத் தெரியாமல் சில பயணிகள் கதவைத் திறந்து கொண்டு இறங்குகின்றனர். கதவின் கட்டுப்பாடு ஓட்டுநரிடம் இல்லை.
இதனால் விபத்து ஏற்படலாம். அதற்கு ஓட்டுநரை பொறுப்பாக்கினால் எப்படி? சிலர் பயணச்சீட்டு வாங்காமலேயே பயணிகள் கூட்டத்தோடு பேருந்தில் ஏறிவிடுகின்றனர். பேருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு பயணச்சீட்டு கேட்கின்றனர்.

ஓட்டுநர் என்ன செய்ய முடியும்? பயணியிடம் பணத்தை ஓட்டுநர் பெற்று வைத்துக் கொள்வதும் விதிமுறை மீறலாகும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு என்ன?'' என கேட்கிறார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ. சார்பு) மாநில துணைத் தலைவர் வி. பிச்சை. இதுதொடர்பான வழக்கை நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது.
அரசு பேருந்துகளின் "பாடி' தனியார் பேருந்துகளை ஒப்பிடும்போது எடை குறைவாக இருப்பதால் விபத்து நேர்ந்தால் அதிக சேதம், இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அரசின் புதிய பேருந்துகள், தனியார் பேருந்துகளுக்கு இணையாக 10,200 கிலோ எடையுடன் "பாடி' கட்டப்பட்டுள்ளதாக பேருந்துகளின் வெளிப்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பேருந்துகளின் வடிவமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்கின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

எனவே, சேவை நோக்கோடு செயல்படும் அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துகளின் தரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...