Wednesday, April 17, 2019

சவுதி - இரு இந்தியர்கள் மரண தண்டனை விவகாரம்!

By RKV | Published on : 17th April 2019 01:10 PM   dinamani

சவுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் எனும் இரு சீக்கியர்கள் குடித்து விட்டு சண்டையிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்கள். முதலில் அது ஒரு நியூசன்ஸ் வழக்காகப் பதிவாகி விசாரணைக்கு உள்ளானது. ஆனால், விசாரணையின் போது தான் தெரிய வந்தது, அவர்கள் குடித்து விட்டுச் சண்டையிட்டது மட்டுமல்லாமல் அதற்கும் முன்பே திருடிய பணத்தைப் பங்கு பிரிக்கும் தகராறில் தங்களது கூட்டாளியைக் கொலை செய்த விவகாரம்.



இந்தியாவின் லூதியானாவில் இருந்து சவுதி சென்றடைந்த ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் மற்றும் ஆரிஃப் இமாமுதீன் மூவரும் கூட்டாளிகள். நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவது தான் இவர்களின் தொழில். அப்படி கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரிக்கும் போது தகராறு ஏற்பட்டதில் முதலிருவரும் இணைந்து ஆரிஃப் இமாமுதீனைக் கொன்று விடுகிறார்கள். கொலையைச் செய்து விட்டு சில வாரங்கள் அதை மறைத்தும் இருக்கிறார்கள். பிறகெப்படியோ குடியின் காரணமாக நேர்ந்த தெருச்சண்டையில் குட்டு வெளிப்பட உடனே அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையிலடைத்தது சவுதி காவல்துறை. சவுதியைப் பொருத்தவரை நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவதும் கூட மரண தண்டனைக்குரிய குற்றமே! (இதை அவர்கள் சட்டப்படி ஹிராபா என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது நெடுஞ்சாலைகளில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிறது சவுதி சட்டம்)

அத்துடன் இவர்கள் கொள்ளையடித்ததோடு தங்கள் கூட்டாளியைக் கொலை செய்து அதையும் மறைக்க முயன்றார்கள் எனும் குற்றமும் சேர்ந்து கொள்ள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களது குற்றத்துக்கான வழக்கு விசாரணை 2017, மே 31 ஆம் நாள் நடைபெற்றது. அப்போது இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணையின் போது தூதரக அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தான் இருவருக்கான தண்டனை நெடுஞ்சாலைக் கொள்ளையின் அடிப்படையில் தீர்ப்பாகக் கூடும் என முடிவானது. அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கின் போக்கை அறிந்து வந்தனர். ஆயினும் இம்மாத தொடக்கத்தில் சவுதி சிறையில் இருக்கும் இரு சீக்கியர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் தேடத் துவங்கியதும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மீண்டும் இந்த வழக்கின் போக்கை அறிய சவுதி அரசை தொடர்பு கொண்ட போது தான் தெரிய வந்திருக்கிறது... நெடுஞ்சாலைக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட அந்த இரு சீக்கியர்களுக்கும் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விஷயம்.

இரு நாட்டு அரசு நடைமுறைகளின் படி சவுதி அரசு, அயல்நாட்டில் இருந்து பணிக்காக சவுதி வந்து அங்கு குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனை பெறவிருக்கும் கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்றும் முன் அவர்களுடைய தாய் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆயினும் குறிப்பிட்ட இந்த வழக்கில் அந்த நடைமுறைகள் எதையும் சவுதி அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவர்கள் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளிக்காமலேயே தண்டனையை நிறைவேற்றி இருப்பதுடன், மரண தண்டனையில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உடலையும் தாய்நாட்டுக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் இத்தகைய தண்டனைகளில் சவுதி அரசு பின்பற்றும் கடுமையான சட்டங்களையே அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் முன்வைக்கிறார்கள்.

சவுதிக்கு பணி நிமித்தம் 2013 ஆம் ஆண்டு வாக்கில் லூதியானாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த இரு சீக்கியர்களின் கதை இப்படி முடிந்தது. அவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றம் பற்றித் தெரிய வந்தது கூட சத்விந்தர் சிங்கின் மனைவி சீமா ராணி, சவுதியில் இருக்கும் தன் கணவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று அளித்த பெட்டிஷனின் பின்னேயே இந்தியத் தூதரரக அதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லையேல் இன்னும் கூட அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வந்திருக்க வாய்ப்பில்லை. சீமாராணியின் பெட்டிஷனின் பின்பு தான் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இரு சீக்கியர்களின் உடலை அளிக்கக் கோரி இந்தியத் தூதரகம் சவுதி அரசைக் கேட்டுக் கொண்டது. ஆயினும் அதற்கு சவுதி அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் சவுதியின் கடுமையான சட்டங்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

மேற்கண்ட வழக்கில் அந்த இரு சீக்கியர்களும் செய்தது குற்றம். முதல் குற்றம் வேலை நிமித்தமாகச் சென்ற நாட்டில் குழு சேர்ந்து கொண்டு நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபட்டது. இரண்டாவது குற்றம் கொள்ளையில் பங்குத்தகராறு காரணமாகக் கூட்டாளியைக் கொன்றது. இத்தகைய இரு குற்றங்களையும் செய்து விட்டு இன்று இந்தியாவில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பெயிலில் வெளிவந்தோ அல்லது காசை வாரி இறைத்து சந்தேகத்தின் பேரில் ஒட்டுமொத்த வழக்கில் இருந்தே வெளிவந்தோ ஜாலியாக ஊரைச் சுற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னாரால் தான் கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டும் கூட மேல்முறையீட்டுக்கு மேல் முறையீடாகச் செய்து அரசியல், பண பலம் மற்றும் அதிகார பலத்தால் வழக்கில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக உலவக்கூடிய கொடுங்குற்றவாளிகள் இந்தியாவில் பலர் இருக்கக் கூடும். அவர்களை சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடிந்ததில்லை.

ஆனால், சவுதி அரசில் அப்படி எந்த அவலமும் நேராமல் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள இரு இந்தியர்களுக்கும் முறைப்படி தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை எண்ணி எல்லாம் சட்டப்படி தான் நடந்திருக்கிறது என்று ஆறுதல் கொள்வதா? அல்லது குறைந்தபட்சம் தண்டனை நிறைவேற்றம் குறித்து சவுதியில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளித்து விட்டு இவர்கள் தண்டனையை நிறைவேற்றி இருக்கலாமே! இதென்ன தாய்நாட்டுக்கே தெரியாமல் இரு இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதென்றால் அது எப்பேர்ப்பட்ட அராஜகம், அநியாயம்? என்று ஒரு இந்தியனாகப் பொங்கி எழுவதா? என்பது தான் விளங்கவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024