Wednesday, May 1, 2019

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு: 76 இடங்கள் நிரம்பவில்லை

By DIN | Published on : 01st May 2019 02:44 AM |

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 76 இடங்கள் இன்னும் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. 

இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை. அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், 999 இடங்கள் நிரம்பின. இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதில், 76 இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும்,நான்-கிளீனிக்கல் எனப்படும் மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புகளுக்கான இடங்கள் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அவற்றில், அரசு கல்லூரிகளில் 6 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 36 இடங்களும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 34 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான சிறப்பு கலந்தாய்வு அடுத்த வாரம் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத் தேர்வுத் துறை கூடுதல் இயக்குநர் செல்வராஜ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024