Tuesday, May 28, 2019

மகளிர் படும் பாடு!

By ரமாமணி சுந்தர் | Published on : 28th May 2019 01:56 AM |

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மாதவிடாய் சுகாதார தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டிலுள்ள வாஷ் யுனைடெட் என்னும் தொண்டு நிறுவனம் மாதவிடாய் சுகாதார தினத்தை 2013-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது.

மாதவிடாய் தொடர்பாக இளம் பெண்கள், மகளிர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவதும், அவர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதுமே மாதவிடாய் சுகாதார தினத்தை கடைப்பிடிப்பதற்கான நோக்கங்கள். ஒருகாலத்தில் பெண்கள் தங்களுக்குள்ளேயேகூட பேசிக்கொள்வதற்கு கூச்சப்பட்டுக் கொண்டிருந்த மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் பற்றி இப்போது சில ஆண்களும் சிந்திக்கத் தொடங்கியிருப்பதும், அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முற்பட்டிருப்பதும் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க மாற்றங்கள்.

மே 21 முதல் 28 -ஆம் தேதி வரை நமது நாட்டின் ஒன்பது மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் மாசிகா மஹோத்ஸவ் என்னும் மாதவிடாய் உற்சவம் கொண்டாடப்படுகிறது. மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளை களைந்தெறிவதே இந்த விழாவின் நோக்கம்.
மாதவிலக்கின் மூன்று நாள்களும் பெண்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது இன்னமும் கிராமப்புறங்களிலும், சில குடும்பங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மாதவிலக்கு காலத்தில் உணவுப் பொருள்களை குறிப்பாக ஊறுகாய் போன்ற பண்டங்களை தொடக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளும், அவர்கள் மேல் விதிக்கப்படும் சில தடைகளும் மாதவிடாய் சுகாதாரத்துக்கு குறுக்கே நிற்கின்றன. அந்த நாள்களில் அசுத்தமானவர்கள் என்று கருதப்படுவதால் வீட்டுக்குள்ளும், வெளியிலும் சில இடங்களுக்குச் செல்வதற்கு பெண்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்த மூன்று நாள்களும் அவர்களுக்கு குளிப்பதற்குகூட அனுமதி கிடையாது. நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டிய அந்த நாள்களில், மீத  மிருக்கும் உணவு அல்லது பழைய உணவே வழங்கப்படுகிறது.

அந்த நாள்களில் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது என்பதால், பல பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை தாங்களாகவே கடைகளிலிருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாதவிலக்கு சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட செயல்கள் அவர்களின் உடல்நலத்தை வெகுவாகப் பாதிக்கக் கூடும்.

2015-16-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய குடும்ப சுகாதார ஆய்விலிருந்து, நமது நாட்டில் 58 சதவீத பெண்கள் மட்டுமே, அதுவும் கிராமப்புறங்களில் 48 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஏனைய பெண்கள் பெரும்பாலும் வீட்டிலுள்ள பழைய துணியை உபயோகிப்பது மட்டுமல்லாமல், அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
மாதவிலக்கு சமயத்தில் சுத்தமாக இல்லாமல் இருப்பதே இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் 60 சதவீத நோய்த்தொற்றுக்குக் காரணம் என்று ஐ.நா. மக்கள் தொகை நிதியம் 2012 -இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் 60,000 பெண்கள் உயிரிழக்கிறார்கள் என்றும், இவர்களில் மூன்று பேரில் இருவருக்கு இந்தப் புற்றுநோய் வருவதற்குக் காரணம், மாதவிடாய் சமயத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காததே என்றும் கூறப்படுகிறது.

நமது பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நாப்கின்களின் அவசியத்தை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், அதைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்த பெருமை கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலத்தைச் சேரும். குறைந்த செலவில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஏழைப் பெண்களும் நாப்கின்களை பயன்படுத்த வழிவகுத்த இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
இவர் கண்டுபிடித்த இயந்திரம் இன்று நாட்டின் 26 மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது. இவரது வாழ்க்கைக் கதை பேட்மேன் என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்திருப்பதும், இவர் நடித்த ஆவணப் படத்துக்கு 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும், மகளிரின் மாதவிலக்கு சுகாதாரம் எந்த அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. 

தேசிய சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக, 2011 -ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதார திட்டத்தின் கீழ், 10-19 வயதுள்ள பெண்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு, மாதவிலக்கு தொடர்பான சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவது, அவர்களுக்கு ஆஷா அமைப்பின் ஊழியர்கள் மூலம் மலிவு விலையில் நாப்கின்கள் விற்பனை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
பள்ளிகளில் பெண்களுக்கென்று கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் பல பெண் குழந்தைகள் கல்வியைத் தொடருவதில்லை என்றும், அப்படியே தொடர்ந்தாலும் அந்த மூன்று நாள்களும் பள்ளிக்குச் செல்வதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பிரதம் எனும் நிறுவனம் 2018-இல் நடத்திய 13-ஆவது வருடாந்திர கல்வி நிலை ஆய்வு அறிக்கையின்படி, நமது கிராமங்களில் 11.5 சதவீத பள்ளிகளில் பெண்களுக்கென்று தனியாக கழிப்பறை வசதி இல்லை என்றும், 23 சதவீத பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தும் அவை பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பதும் தெரிய வருகிறது.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால். வணிக ரீதியா விற்பனையாகும் நாப்கின்களில் உள்ள பிளாஸ்டிக், மக்காத குப்பையைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் பெண்கள் கழிப்பறையில் நாப்கின்களை எரித்து சாம்பலாகும் இயந்திரங்கள் (இன்ஸினரேட்டர்ஸ்) பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த இயந்திரங்கள் அதிக புகையை வெளியேற்றி மாசு ஏற்படுத்தாமல் உறுதிப்படுத்துவது அவசியம்.

மாத விலக்கு சமயத்தில் தீவிர வயிற்று வலி, அதீத ரத்தப்போக்கு, தலைசுற்றல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவதால், பணி இடங்களில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நினோங் எரிங் என்பவர் மாதவிலக்கு அனுகூல மசோதா (மென்சுரேஷன் ஃபெனிஃபிட் பில்) ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால், பணியிடங்களில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதும், பாலின அடிப்படையில் சலுகைகள் கேட்பது நியாயமில்லை என்பதும் பலரின் (மகளிர் உட்பட) வாதம். இந்தக் காரணத்துக்காகவே மகளிரை பணிக்கு அமர்த்துவது தவிர்க்கப்படலாம் என்பதும் ஒரு வாதம். ஆனால், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், இத்தாலி, ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிலக்கு சமயத்தில் ஒன்றிரண்டு நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான தொழிலாளர் சட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.
பிகார் அரசு 1992 -ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கு மாதத்தில் இரண்டு நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்கி வருகிறது. 

மாதவிலக்கு தொடர்பாக ஒரு வேதனைக்குரிய தகவல். பொதுவாக நமது வீடுகளில் பெண் குழந்தை 12-13 வயதில் பூப்படையும்போது அதை ஒரு மங்களகரமான நிகழ்வாகக் கொண்டாடுகிறோம். ஆனால், ஆட்டிசம் அல்லது மன நலம் குன்றிய பெண் குழந்தைகள் பூப்படையும்போது அவர்களின் தாய்மார்களோ, ஆனந்தப்படுவதற்குப் பதில் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த மூன்று நாள்களைச் சமாளிக்க அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்குள் அந்தத் தாய் படும் இன்னல்கள் ஏராளம். எவ்வளவு பயிற்சி அளித்தாலும் சமாளிக்க முடியாத நிலையில், அறுவைச் சிகிச்சை செய்து அந்தப் பெண் குழந்தையின் கருப்பையை அகற்றி விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர்.

மாதவிலக்கு சமயத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடித்து தங்கள் உடல் நலத்தை மகளிர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு குடும்பத்தினர் (குடும்பத்தில் உள்ள ஆண்கள் உட்பட), இந்தச் சமூகம் மற்றும் அரசும் ஒத்துழைக்க வேண்டும். அனுசரணையாக கணவர் இருப்பதுடன், மனைவி மற்றும் பெண் குழந்தைகளுக்கு நாப்கின் வாங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் ஒரு நாளில் பல மணி நேரங்களைச் செலவிடும் பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்களில் அவர்களுக்கென்று தண்ணீர், சோப்பு, தாழ்ப்பாளுடன் கூடிய கதவு போன்ற வசதிகள் கொண்ட தனிக் கழிப்பிடம் இருக்க வேண்டும். உபயோகித்த நாப்கின்களை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு அப்புறப்படுத்துவதற்கான வழிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். வணிக ரீதியாக விற்கப்படும் நாப்கின்களை வாங்க வசதியில்லாதவர்களுக்கு மலிவு விலையில் தரமான நாப்கின்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்.

(இன்று மாதவிடாய் சுகாதார தினம்.)

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...