Saturday, May 25, 2019

தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயம் எழுதிய பிரேமலதா; கட்சியினர் காட்டம்

Added : மே 25, 2019 03:23 | 

சென்னை : 'தே.மு.தி.க.,விற்கு இறுதி அத்தியாயத்தை, பிரேமலதா எழுதிவிட்டார்' என, சமூகவலைதளங்களில், அக்கட்சியினர் பதிவுகளை வெளியிட துவங்கி உள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின், ஓய்வெடுத்து வருகிறார்.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயகாந்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு, அவருக்கு பதிலாக கூட்டணி முடிவுகளை, பிரேமலதா எடுத்தார். ஆரம்பத்தில், கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் மீதும் கோபப்பட்டார்.

ஒரு வழியாக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது.செல்வாக்கு இல்லாத தொகுதிகள் என்று தெரிந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அவற்றை பிரேமலதா ஏற்றார். இந்த தொகுதிகளில், சரியான வேட்பாளர்களையும், அவர் நிறுத்தவில்லை.

கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட, இவரின் சகோதரர், சுதீஷை தவிர்த்து, மற்ற மூவரும், தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல் திணறினர்.கட்சி பொருளாளர் என்ற அடிப்படையில், அவர்களுக்கு எவ்வித உதவிகளையும் பிரேமலதா செய்யவில்லை. இதனால், அ.தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வெறுப்புக்கு, தே.மு.தி.க., வேட்பாளர்கள் ஆளாகினர். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் பணபலம், படை பலத்தை எதிர்கொள்ள முடியாமல், தே.மு.தி.க., வேட்பாளர்கள் படுதோல்வியை தழுவியுள்ளனர்.

கட்சிக்கு, 3 சதவீத ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. பிரேமலதாவின் தவறான வழிநடத்தலே, கட்சியின் தோல்விக்கு காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.'விஜயகாந்த் துவக்கிய கட்சிக்கு, பிரேமலதா இறுதி அத்தியாயத்தை எழுதிவிட்டார்' என, சமூகவலைதளங்களில், தே.மு.தி.க.,வினர் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.இது, தே.மு.தி.க.,வில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024