Tuesday, May 28, 2019

சுயவிளம்பர டாக்டர்கள் 50 பேருக்கு, 'நோட்டீஸ்'

Added : மே 28, 2019 04:05

சென்னை : சுயவிளம்பரம் செய்த, 50 டாக்டர்கள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்த, 1.40 லட்சம் டாக்டர்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில், பதிவு செய்துள்ளனர். இதில், 90 ஆயிரம் டாக்டர்கள், மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து, இணையதளங்களில், 'நான் தான் சிறந்த டாக்டர்' என்பது போல், சிலர் சுயவிளம்பரம் செய்கின்றனர்.

பொது மக்களை குழப்பும் வகையில், டாக்டர்கள், 'ஆன்லைனில்' சுயவிளம்பரம் செய்வது, இந்திய மருத்துவ கவுன்சலில் விதிப்படி குற்றமாகும். எனவே, ஆன்லைனில் சுயவிளம்பரம் செய்யக் கூடாது என, அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 'டீன்'கள் மற்றும் டாக்டர் சங்கங்களுக்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட, 50 டாக்டர்களுக்கு, 15 நாட்களில் பதிலளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், ''ஆன்லைனில் சுயவிளம்பரம் செய்த, டாக்டர்கள் மற்றும் மருத்துவம் பார்க்கும் இடத்தில், தங்களின் படிப்பு விபரத்தை குறிப்பிடாத டாக்டர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024