Thursday, May 2, 2019

8 மணி நேர வேலைக்கு 6 மணி நேர பயணம்

மேல்மருவத்தூர் டூ ஆதம்பாக்கம்; 8 மணி நேர வேலைக்கு 6 மணி நேரப் பயணம்

வி. ராம்ஜி

தி விகடன்

மேல்மருவத்தூர் தெரியும்தானே. சென்னையில் இருந்து தாம்பரம் தாண்டி, செங்கல்பட்டு, மாமண்டூர், மதுராந்தகத்தையெல்லாம் கடந்தால் மேல்மருவத்தூர் வரும் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். மேல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்வதற்கு சாலை உண்டு. அந்தச் சாலையில் 10 கி.மீ. பயணம் செய்தால் ராமாபுரம் எனும் கிராமத்தை அடையலாம். அங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் தீப்பெட்டி சைஸில் உள்ள அண்ணாநகர் எனும் பகுதியை அடையலாம்.

அடேங்கப்பா... என்று சொல்லும்போதே அயர்ச்சியாகிறதுதானே. ஆனால் மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரம் அண்ணாநகரில் இருந்துதான் தினமும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு வருகிறார் ஆறுமுகம்.
இதுக்கே மலைத்தால் எப்படி?

எங்க ராமாபுரம் அண்ணாநகர்லேருந்து மேல்மருவத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு 13 கி.மீ. அங்கேருந்து ரயில்ல வேலைக்கு வந்துக்கிட்டிருக்கேன்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் ஆறுமுகம்.
‘’இது சொந்தவீடு. கூட்டுக்குடும்பமா இருக்கோம். பெருசா படிக்கலை. 22 வருசமா ஹோட்டல் சர்வர் வேலைதான் பாத்துக்கிட்டிருக்கேன். அண்ணாநகர்லேருந்து சைக்கிள்ல ராமாபுரம் வந்துருவேன். அங்கே ஒருநண்பர் எலப்பாக்கத்துலேருந்து டூவீலர்ல வருவார். அவர் லீவு, உடம்புக்கு முடியலை அப்படி இப்படின்னு ஆகிட்டா, அங்கேருந்து பஸ் பிடிச்சு, மேல்மருவத்தூர் வந்து, விறுவிறுன்னு மேல்மருவத்தூர் ஸ்டேஷனுக்கு ஓடுவேன். அங்கே சென்னைக்குப் போற பல்லவன் எக்ஸ்பிரஸ்ல ஏறுவேன். பல்லவனை விட்டாச்சுன்னா, அன்னிக்கி கதை கந்தல்தான். அதைவிட்டா, ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சு, வைகைதான். ஆனா அரைநாள் லீவாயிரும். சம்பளமும் கட்டாயிரும்’’ என்கிற ஆறுமுகத்திற்கு, மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம்.

‘’பல்லவன் டிரெயின்ல ஏறி, நேரா மாம்பலம் ஸ்டேஷன்ல இறங்குவேன். சூப்பர் ஃபாஸ்ட்ல ஏறுற மாதிரி, பாஸ் வாங்கிவைச்சிருக்கேன். தடதடன்னு இந்தப் பக்கமா வந்து, பீச்லேருந்து தாம்பரம் நோக்கி போற யூனிட் டிரெயின்ல ஏறி, பரங்கிமலை ஸ்டேஷன்ல இறங்குவேன். அங்கே டைம் இருந்தா, ஒரு கால்மணி நேரம் கண்ணை மூடி ஒரு குட்டித்தூக்கம். வண்டி லேட்டு, சிக்னல் பிராப்ளம்னு எதுனா ஆயிட்டா, கொஞ்சம் ரெஸ்ட்டும் எடுக்கமுடியாது. லேட்டும் ஆயிரும். அப்புறம், மூஞ்சியெல்லாம் அலம்பிட்டு, ஆதம்பாக்கத்துல நான் வேலை பாக்கற ஹோட்டலுக்குப் போயிருவேன். சின்ன ஹோட்டல்தான். ஆனா எப்பவும் கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும்.
முதலாளியும் நல்ல மாதிரி. அங்கேஇங்கேன்னு பல ஹோட்டல்ல சர்வரா வேலை பாத்து, இப்பதான் அஞ்சாறு வருஷமா நல்ல இடமா அமைஞ்சிருக்கு. ராத்திரி பத்துமணி வரைக்கும் பரபரன்னு போகும் வேலை.
அப்புறம் டியூட்டி முடிஞ்சு, ஹாயா, ரிலாக்ஸ்டா பராக்கு பாத்துக்கிட்டெல்லாம் வரமுடியாது. 

பத்துமணிக்கு வேலை முடிஞ்ச பத்தாவது நிமிஷம், பரங்கிமலை ஸ்டேஷன்ல ஆஜராயிருவேன். யூனிட் டிரெயின்ல ஏறி, தாம்பரம் வந்துருவேன். சேலம் எக்ஸ்பிரஸ் பத்தரை பத்தே முக்கால் போல வரும். அதுல ஏறி, மேல்மருவத்தூர் ஸ்டேஷன்ல இறங்கி, வந்தவாசி போற ரோட்டுக்கு வந்து நின்னு, குலசாமியையெல்லாம் வேண்டிக்குவேன். பஸ் ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். முன்னபின்னதான் வரும். யாராவது தெரிஞ்சவங்களோ, அந்தப் பக்கமா போறவங்களோ டூவீலர்ல போனாக்க, கொஞ்சம் ராமாபுரத்துல இறக்கிவிடுங்கண்ணேன்னு சொல்லி ஏறிக்கறதும் நடக்கும். வழக்கமா, டூவீலர் நண்பர் ஒருத்தர் இருக்காரு. அவரும் நானும் வர்ற நேரம் ஒத்துப்போச்சுன்னா, என்னை வீட்லயே கொண்டுபோய் விட்ருவாரு. அப்படி இல்லேன்னா, ராமாபுரம் வந்து, அங்கேருந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குள்ளே போய் சட்டையை கழட்டினா... மணி ஒண்ணு, ஒன்னரைன்னு ஆகியிருக்கும். ஒரு குளியலைப் போட்டு படுத்தேன்னா... உலகமே இடிஞ்சாலும் எதுவும் கேக்காது எனக்கு. அப்புறம் காலைல எந்திரிச்சு, சைக்கிள், டூவீலர், பஸ், டிரெயின்... அப்படின்னு பழையபடி ஓடணும்’’ என்று சொல்லும் ஆறுமுகத்திற்கு எட்டாயிரம் சம்பளம் தாண்டி, தினமும் வரும் டிப்ஸ், பஸ், ரயில் செலவுக்கே சரியாகிவிடும் என்கிறார்.

‘’படிப்பு ஏறலே. இதான் வாழ்க்கைன்னு முடிவாயிருச்சு. மூத்த பையன் ஆறாவது போறான். சின்னப் பையன் ரெண்டாவது போறான். திங்கட்கிழமைலேருந்து வியாழக்கிழமைக்குள்ளே வீக்லி ஆஃப் எடுத்துக்கலாம். அன்னிக்கி, ‘இவன் பேரு ஆறுமுகமா, இல்ல கும்பகர்ணனான்னு கேப்பாங்க எல்லாரும். அன்னிக்கி சாயந்திரம், பசங்க ஸ்கூல் விட்டு வரும்போது நான் இருப்பேனா? அதுங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். சைக்கிள்ல உக்காரவைச்சு ஏரியாவை ஒரு ரவுண்டு வந்தா, உற்சாகமாயிருவாங்க. பத்துரூபாய்க்கு பிஸ்கட்டும் சாக்லெட்டும் வாங்கிக் கொடுத்தா போதும், குஷியாயிருவாங்க. எல்லாத்துக்கும் மேல, அடுத்தடுத்த நாள், காலைல மூணுமணி நேரம் நைட் மூணுமணி நேரம்னு டிராவல்h பண்ணி வேலை பாக்கற எனக்கு, செம எனர்ஜி பசங்கதான்!’’ என்றபடி மாம்பலம்ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி பேசிக்கொண்டே இருந்தவர், ‘அண்ணா... இதோ யூனிட் ரயில் வந்துருச்சுண்ணா. பாப்போம்ணா’ என்றபடி ரயிலில் ஏற ஆயத்தமானார்.

வாழ்க்கை நீண்டதான பயணம் என்பது உண்மைதான். எட்டுமணி நேர வேலைக்கு ஆறுமணி நேரப் பயணம் செய்யும் ஆறுமுகங்கள், இன்னும் எத்தனையெத்தனை பேரோ? எங்கிருந்து வருகிறார்களோ...?
அப்படியான உழைப்பாளிகளுக்கு வலிக்க வலிக்க கைகுலுக்குவோம். வாழ்க உழைப்பாளர்கள். மே தினத்தில், உழைப்பாளர்கள் தினத்தில் அவர்களை மனதார நினைத்து வாழ்த்துவோம்; போற்றுவோம்!

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...