Sunday, May 5, 2019

உழைப்பின் சிகரம் - வணிகர்களை வாழ்த்துவோம்!

Added : மே 05, 2019 02:05




தமிழகத்தில் உள்ள வணிகர்கள், மே, 5ம் தேதியை, வணிகர் தினமாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு, அவர்களின் உழைப்புக்கு, தலை வணங்குவோம்.

'வேலை தாருங்கள்' என, அரசை தொந்தரவு செய்யாமல், தங்களின் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து, தாங்களும் வாழ்ந்து, பலருக்கு வேலை கொடுத்து, அரசுக்கு வரியும் செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வணிகர்களை போற்றுவோம்.வணிகம் செய்வோருக்கு, ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், படித்தோர், படிக்காதோர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரோடும் பழகும் வாய்ப்பும், தேவையும், வணிகத்தில் மட்டுமே சாத்தியம்.

அது மட்டுமல்ல, கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், ஏன் பிற நாடுகளோடு தொடர்பு ஏற்படுத்தி, இணைந்து பணியாற்றும் வாய்ப்பு, வணிகர்களுக்கு மட்டும் தான் கிடைக்கிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கூட, பாதிக்கப்படும் மக்களுக்கு, அரசு உதவி கிடைப்பதற்கு முன், வணிகர்களின் உதவி தான், உடனடியாக கிடைக்கிறது.சிறப்பு வாய்ந்த வணிகத்தை, எல்லாராலும் செய்து விட முடியாது. அதற்கு பல திறமைகள் வேண்டும்.

நன்கு திட்டமிடல், விடா முயற்சி, கடும் உழைப்பு வேண்டும். மேலும், வேலை செய்யும் திறன், வேலை வாங்கும் திறன், வாடிக்கையாளர்களின் தேவை அறிதல், நிதி நிர்வாகம் போன்ற பல திறமைகள் அவசியம்.வெற்றிபிரமாண்ட கனவுகளும், பெரிய கற்பனைகளும் இருப்போர், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் படைத்த வணிகர்கள், மிகப் பெரிய வெற்றி அடைகின்றனர்.
வணிகம் என்பது ஒரு குணம்; அது எல்லாருக்கும் அமைந்து விடாது; சிலருக்கு இயல்பாய் அமையும்; சிலருக்கு கடும் முயற்சி செய்தால் அமையும்; சிலருக்கு எவ்வளவு முயன்றாலும் அமையாது.துாங்கும் நேரம் போக, மீதி நேரம் எல்லாம் உழைக்கும் வர்க்கம் ஒன்று உண்டு என்றால், அது வணிகர்கள் மட்டும் தான்.எனினும், சிறு வணிகர்களின் நிலை தான் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. மிக கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
குடும்பத்தினர் அனைவருமே உழைக்கின்றனர். உணவை கூட, கடையில் நின்று கொண்டே சாப்பிடும் நிலையும் காணப்படுகிறது.காலை, 6:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை கடையில் இருக்க வேண்டும்; விடுமுறை எடுக்க முடியாது; பொங்கல், தீபாவளி, உறவினர் திருமணம் போன்ற நாட்களில் கூட, கடைக்கு விடுமுறை விட முடியாது. குடும்பத்தினரோடு பேசி மகிழவும் நேரம் கிடையாது; முழு நேரமும் கடையிலேயே இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் வியாபாரத்தில், கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடியும். 

இல்லையென்றால், வியாபாரம் குறைந்து, நஷ்டம் ஏற்படும். கடினமாக உழைத்தால் மட்டுமே, குடும்பத்தினரை காப்பாற்ற முடியும்; குழந்தைகளை படிக்க வைக்க முடியும்; திருமணங்கள் செய்து வைத்து முடியும்.உழைப்பு கொஞ்சம் குறைந்தால் கூட, பணக் கஷ்டம் வந்து விடும். சிக்கனமாக வாழ்ந்தால், கவுரவமாக வாழ்க்கை நடத்தலாம். இது தான், சிறு வணிகர்களின் நிலை!

பிரச்னைகள்
அவர்களின் உழைப்பை சுரண்டுவது, வட்டி என்ற அரக்கன். இதில் கொடுமை என்னவென்றால், வணிகர்களை பாதுகாக்க வேண்டிய, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய வணிகர் சங்க நிர்வாகிகளே, பல இடங்களில் வட்டி தொழில் செய்கின்றனர்; சிறு வணிகர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர்.எனவே, சிறு வணிகர்கள், வங்கி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

வங்கி கடன் கிடைப்பது கடினம் தான். ஆனால், அடைப்பது சுலபம். தனியார் கடன் கிடைப்பது சுலபம்; அடைப்பது கடினம்.வளர்ச்சியும், மகிழ்ச்சியும் அவர்கள் சொத்தாக மாற வேண்டும். அதற்கு அரசுகளும் உதவ வேண்டும். வணிகர் சங்கங்களும் உதவ வேண்டும். அப்போது தான், வணிகர் வாழ்வில் வசந்தம் வீசும்.

'தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்' என்பர். அரசு தரப்பில் வரும் கெடுபிடிகள், சமூக விரோதிகளிடமிருந்து வரும் பிரச்னைகள், போட்டி மற்றும் பொறாமையால் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றின் போது, வணிகர் சங்கங்கள், வணிகர்களுக்கு துணையாக இருக்கின்றன.வணிகர்களின் தேவைகளையும், அவர்களின் பிரச்னைகளையும், அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவற்றை தீர்த்து வைக்கும் முயற்சியில் சங்கங்கள் ஈடுபடுகின்றன.

சில நேரங்களில், வணிகர் சங்கங்கள், வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என நினைத்து, அவர்களை உறக்க நிலைக்கு கொண்டு செல்கின்றன. அவர்களை பலசாலியாக மாற்றுவதற்கு பதில், பலவீனமானோராக மாற்றுகின்றன.வணிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றில், 'வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நம் நாட்டையே பிடித்துக் கொண்டனர். எனவே, பிற நாட்டினரை, நம் நாட்டு வணிகத்தில் அனுமதித்தால், அவர்கள் நம் நாட்டை பிடித்துக் கொள்வர். எனவே, அன்னியர்களை வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது' என்று பேசினர்.

வணிகர்கள் மத்தியில் பயத்தை விதைப்பதன் மூலம், நம் வணிகர்களை ஆடுகளாக மாற்றி விடுகிறோம்; வெளிநாட்டினரை சிங்கங்களாக சித்தரிக்கிறோம். இதனால், நம்மவர்களுக்கு பயமும், தாழ்வு மனப்பான்மையும் வந்து விடுகிறது.இதற்கு மாறாக, நம் பழைய வரலாறுகளை சொல்லி, 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர் கடல் வாணிபம் செய்ததையும், கிழக்காசியா முழுவதையும், சோழர்கள் ஆட்சி செய்ததையும் கூற வேண்டும்.
அவர்கள் வழி வந்த நாமும், சாதிக்கப் பிறந்தோர் தான். ஆடுகள் அல்ல; சிங்கங்கள் என்பதை, வணிகர்களுக்கு உணர்த்த வேண்டியது, சங்கங்களின் கடமை.வழிமுறைஉழைப்பை கூட்டி, திறமையை வளர்த்து, தொழிலில் சாதிக்க முயல வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாம், நம் வணிகத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்; வெற்றி பெற முடியும்.

எத்தனை அன்னியர் வந்தாலும், உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்பட மாட்டார்.வணிகர்களுக்கு தேச பக்தியும் அவசியம். ஆரஞ்சு பழ கதை ஒன்று உண்டு. ஒரு முறை, அமெரிக்காவில் விளைந்த ஆரஞ்சு பழங்கள், ஜப்பான் சந்தைகளில் குவிக்கப்பட்டன. விலை மலிவாகவும், சுவை அதிகமாகவும் அவை இருந்தன; எனினும், ஜப்பானியர்கள் அவற்றை வாங்கவில்லை.அதற்கு அவர்கள் சொன்ன காரணம். 'எங்கள் நாட்டு பழம் விலை அதிகம் தான்; கொஞ்சம் புளிப்பு தான். ஆனாலும், எங்கள் நாட்டு வியாபாரி பலனை அடைய வேண்டும். 'எனவே, அமெரிக்க ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு, எங்கள் செல்வம் மூலம், அமெரிக்கா வளர்வதை அனுமதிக்க மாட்டோம்' என்றனர்.

இது தான் தேசபக்தியின் வலிமை; ஒற்றுமையின் பெருமை; குடிமக்கள் மற்றும் வர்த்தர்களின் கடமை. இத்தகைய வழிமுறையை நாமும் பின்பற்றினால், நம் வணிகர்கள் வளர்வர். நம் நாடும் வளம் பெறும்; உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழும்.
தொடர்புக்கு:

எஸ்.ஆர்.ரத்னம்,
வர்த்தகர் அணி நிர்வாகி, பா.ஜ.,

அலைபேசி: 9840882244உழைப்பின் சிகரம் - வணிகர்களை வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...