Sunday, May 5, 2019

சதுரகிரியில் அன்னதான மடங்கள் மூடல்: அறநிலையத்துறை ஆசியுடன் அராஜகம் இட்லி ரூ.20, தோசை ரூ.100க்கு விற்பனை

Added : மே 05, 2019 04:03





ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரியில் பக்தர்களின் பசியை போக்கி வந்த, தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டுள்ளதால், கடைகளில் இட்லி, ௨௦ ரூபாய்க்கும், தோசை, 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையில், சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வது வழக்கம்.உத்தரவுசில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 10 பேர் பலியாகினர்.

இதனால், அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.பக்தர்களுக்கு மலையடி வாரம், மலையில் தனியார் அன்னதான மடங்கள், இடைவிடாது அன்ன தானம் வழங்கி, பசியை போக்கி வந்தன. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரகேடு என்ற காரணத்தை கூறி, மலையில் செயல்பட்டு வந்த அன்னதான மடங்களை, அறநிலையத்துறை மூட உத்தரவிட்டது.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்துவங்கினர். வறட்சியால் ஓடைகளில் தண்ணீர் இல்லை. மலைப்பாதையில் அறநிலையத்துறையோ, வனத்துறையோ தண்ணீர் வசதியும் செய்யவில்லை. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் மலையேறும் பக்தர்கள், கோவிலுக்கு செல்வதற்குள் காலியாகி தவிக்கின்றனர்.மலையில், ஒரு அடிக்குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே பிடித்து குடிக்க வேண்டியுள்ளது.

ஓட்டல்களுக்கு அனுமதி

மலைப்பாதை, மலையில், அறநிலையத்துறை அனுமதியுடன் சில ஓட்டல்கள் இயங்குகின்றன. இங்கு இட்லி, 20 ரூபாய் தோசை, 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பக்தர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.இதற்காகவே, அன்னதான மடங்களை அறநிலையத்துறை மூடியுள்ளது என, அவர்கள் கொந்தளிக்கின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத்தும் இது குறித்து புகாரளித்துள்ளது.

பக்தர்களின் புகாரை சமாளிக்கும் வகையில், கோவிலில் அறநிலையத்துறை சார்பில், தொன்னையில் வைத்து சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னதான மடங்கள் இருந்தால் தாகம், பசிக்கு தீர்வு கிடைத்திருக்கும் என, நேற்று கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.கோவிலுக்கு வரும் முதியவர்கள் தாகத்தாலும், பசியாலும் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

20 ஆண்டில் இப்படி இல்லை

கடந்த, 20 ஆண்டுகளாக, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சதுரகிரி வருகிறேன். இப்போது போல தண்ணீர், உணவு கிடைக்காமல் தவித்ததில்லை. என்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பார்த்து குரங்குகள் ஓடிவந்து தாகம் தீர்த்தன. பக்தர்களுக்கு, தற்போதைய நிலை ஒரு சோதனையாகும். இது, வேதனையானது.
மணி, பக்தர், மேலுார், மதுரை மாவட்டம்

முறைகேடு செய்ய திட்டம்

தனியார் அன்னதான மடங்களை மூட உத்தரவிட்ட அறநிலையத்துறை, தனியார் ஓட்டல்களை திறக்க அனுமதித்துள்ளது. அதிக விலையில் உணவுப் பொருட்களை விற்கின்றனர். அவர்களிடமிருந்து, கமிஷன் பெற அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதை கண்டித்து போராட்டம் நடத்துவோம். மத்திய, மாநில அரசிடம் புகார் தெரிவிப்போம். நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.

சரவணகார்த்திக்,

மாநில அமைப்பாளர், விஷ்வ ஹிந்து பரிஷத்
நீதிமன்ற உத்தரவை மீறிய அறநிலையத்துறை
சதுரகிரி மலையில், காளிமுத்து சுவாமிகளின் கஞ்சி மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதியளித்திருந்தது. அங்கு சமையல் செய்ய மடத்தினர் முற்பட்ட நிலையில், மின் ஒயர்களை துண்டித்தும், ஐந்து கேன்களில் இருந்த தண்ணீரை பறிமுதல் செய்தும், அறநிலையத்துறை அடாவடி செய்துள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல். பக்தர்களின் பசியை போக்கும் எங்களுக்கு, அறநிலையத்துறை கடும் சிரமத்தை தருவது வேதனையானது.
பாலசுப்பிரமணியன் தலைவர்,

காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம், சதுரகிரி.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...