Thursday, August 8, 2019


மனசு போல வாழ்க்கை 03: சூழ்நிலைக் கைதியா நீங்கள்? 




ஒரு பெரும் தொழிலதிபருக்குப் பங்குசந்தைச் சரிவால் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நஷ்டம். ஒரு தினசரிக் கூலி தொழிலாளி தன் ஒரு நாள் சம்பளத்தை ரயிலில் தவறவிட்டதால் அவருக்கு அன்று 500 ரூபாய் நஷ்டம்.

யாருடைய நஷ்டம் பெரிது? அவரவர்க்கு அவரவர் நஷ்டம் பெரிது என்பதுதான் உண்மை. தர்க்க அடிப்படையில் ஓர் அளவீட்டை உருவாக்கிப் பிறர் உணர்வுகளைத் தர வரிசைப்படுத்துவது முட்டாள்தனம். ஆனால், இதைத் தவறாமல் செய்கிறோம்.

ஒரு துயரை இன்னொரு துயருடன் ஒப்பிட முடியாது. ஒரு சாதனையை இன்னொரு சாதனையுடன் ஒப்பிட முடியாது. தனிநபர் மனநிலைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன.

ஆதார குணம்தான் நீங்கள்

என் பயிலரங்குகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று: “மனிதன் சூழ்நிலைக் கைதிதானே, அதனால் மனித மனம் பற்றிய எந்தக் கணிப்பும் மாறக்கூடியதுதானே, அப்படியென்றால் அவரவர் வாழ்க்கையை அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள்தான் தீர்மானிக்கின்றனவா?” மனிதனின் பல நடத்தைகளைச் சூழல் மாற்றலாம். ஆனால், ஆதார குணங்கள்தாம் மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பேன்.

உதாரணத்துக்கு, கொதி நீரில் ஒரு கேரட் துண்டையும் முட்டையையும், காபிக்கொட்டையையும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே போடுங்கள். சிறிது நேரத்தில் மாற்றங்களைக் கவனியுங்கள். கடினமாக இருந்த கேரட் வெந்துபோய் மென்மையாக மாறிவிடுகிறது.

பெரும்பகுதியும் திரவமாய் இருந்த முட்டை திடமாக மாறிவிடுகிறது. காபி கொட்டை தான் கரைவது மட்டுமல்லாமல் கொதி நீரையே மணமாகவும் சுவையாகவும் மாற்றிவிடுகிறது. தான் உள்வாங்கும் பொருட்களின் தன்மையை மாற்ற வல்லது கொதி நீர். ஆனால், எது எப்படி மாறும் என்பது அதனதன் ஆதாரக் குணம் சார்ந்தது.

எதிர் தரப்பு நியாயம் தெரிகிறதா?


என் உறவினர் ஒருவர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியில் தவறாமல் 999 வியாதிகளைத் தடுக்கும் வழி முறைகள் இருக்கும். இன்னோர் அன்பர் ஒரு பிரபல சுவாமிஜியின் சுருக்கமான உரைகளுக்கு மிக நெடிய பொழிப்புரைகளை அனுப்புவார்.

இன்னொருவர் உடனடி புரட்சிக்குத் தயார் ஆகுங்கள் என்ற ரேஞ்சுக்குத் தெறிக்க விடுவார். இத்தனை செய்திகள் என்னை அடைந்தாலும் எதைத் தேர்வு செய்வது என்பதை என் உள அமைப்பு முடிவெடுக்கிறது. எத்தனை தாக்கங்கள் வெளியிலிருந்து வந்தாலும் அதைச் சமைத்துக் கொடுப்பது நம் உள் மனம் மட்டுமே.

நம் உணர்வையும் எண்ணத்தையும் குழைத்து அந்த நிகழ்வைப் பார்க்கையில், அது நம் அனுபவமாக மாறுகிறது. தொடர் அனுபவங்கள்தாம் வாழ்க்கையின் சகலப் படிப்பினைகளுக்குப் பெரும் காரணம். இந்தப் படிப்பினைகளுக்குத் தோதான சம்பவங்களைச் சூசகமாகத் தேர்ந்தெடுக்கும் உள் மனம். பிறகென்ன? ‘எல்லாம் சூழ் நிலைதான் காரணம்!’ என்று பேச வைக்கும்.

நம் மனத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாதபோது அடுத்தவர் மனம் எப்படிப் புரியும்? தன்னைப் போலத்தான் பிறரும் என்று அது தட்டையாகப் புரிந்துகொள்ளும். தன் அனுபவம் சார்ந்த நியாயங்களைப் பொதுவாக்கும்.

“ஒரு நாள் கூலி 500 ரூபாயைத் தொலைத்ததா பெரிது? ஒரு நாள் சம்பளம் இல்லாமல் இருப்பது என்ன அவர்களுக்கெல்லாம் புதிதா? இந்த 50 கோடி ஷேர் மார்க்கெட் லாஸ் எத்தனை பேரைப் பாதிக்கும்? கம்பெனி பிளான்ஸ் எவ்வளவு தடைபடும்?”

“அவர் பணக்காரர். எத்தனை கோடி தொலைச் சாலும் திரும்ப எடுத்துருவாரு. இன்னிக்கு நான் பணம் இல்லாம போனா ராத்திரி யாருக்கும் சோறு கிடையாது. குழந்தைக்கு மருந்து வாங்கணும். இன்னிக்கு பணத்தைத் தொலைச்சதால எங்க குடும்பத்துக்கே கஷ்டம்..!”

எதிர் தரப்பு நியாயங்கள் தெரிய, எதிர் தரப்பு எண்ணங்களையும் உணர்வுகளையும் அறிய வேண்டும். எதிராளியின் மனத்தை அறிந்தால், நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்சினைகள் காணாமல் போய்விடுமே?

அதற்கு எம்பதி (Empathy) வேண்டும். அதை அடுத்த வாரம், பொறுமையாகப் பார்க்கலாம்!

(தொடரும்)

கட்டுரையாளர் மனிதவளப் பயிற்றுநர்

கேள்வி : எவ்வளவு படித்தாலும் பேசினாலும் திடீர் என்று நம்பிக்கை விட்டுப் போய்விடுகிறது. நிறைய வகுப்புகள் போயிருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன். ஆனாலும் எந்த ஊக்கமும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. என்ன செய்யலாம்?

பதில் : ஒரு உடற்பயிற்சியாளர் எத்தனை வகுப்புகளுக்குப் போனாலும் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் தினசரி ‘ஒர்க் அவுட்’ செய்யாமல் இருந்தால் அவரால் அந்த வடிவத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாது. அது போலதான் மன நம்பிக்கையும்.

ஜிக் ஜிக்லர் என்ற பயிற்சியாளர் சொல்வார்: “ஊக்கம் என்பது தினசரி வேலை- குளிப்பதைப் போல!”

தினமும் நம்பிக்கை வளர்க்கும் செய்கைகளும் செய்திகளும் முக்கியம். குறிப்பாகத் தூங்குவதற்கு முன்னும், விழித்தவுடனும்.

நல்ல இசை, நல்ல புத்தகங்கள், உடற்பயிற்சி, வழிபாடு, ஊக்கம் தரும் கதைகள், நேர்மறை உணர்வு தரும் நண்பர்கள் என உங்கள் தேர்வுகளைத் தினசரிச் செய்வது அவசியம்!

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...