மனசு போல வாழ்க்கை 04: கதவுகள் பல, சாவி ஒன்று!
பிறர் மனத்தை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். அதற்கு எம்பதி (empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். எதிராளியின் மனநிலையில் தன்னை நிறுத்தி அவரின் கண்ணோட்டத்தை அறிவது என்பது அவ்வளவு சுலபமாக வருவதல்ல.
ஆளுக்குத் தகுந்தாற்போலதான் நம்முடைய நுணுக்கமான உணர்வுகள்கூட வேலை செய்யும். அதிவேகமாக வந்த கார் மோதியதால் சிறுவன் ஒருவனுக்குத் தலையில் பலத்த காயம் என்று ஒரு செய்தி வருகிறது. இதை வெறுமனே படித்துவிட்டு ‘பாவம்’ என்று கடந்து செல்லும் உங்கள் மனம்.
செய்தியைப் படிக்கும்போது அது உங்களுடைய நண்பருடைய மகன் என்று தெரியவந்தால் சற்றுப் பதற்றமடைந்து ஃபோனில் அழைத்து விசாரிக்கலாம் என்று தோன்றும். அதுவே உங்கள் சொந்த மகன் என்றால்…? நிலைகுலைந்துபோய் மகனின் மொத்த வலியையும் அடுத்த கணமே உணர்வீர்கள்.
யாரோ ஒருவரின் மகனுக்கு, நண்பரின் மகனுக்கு, தன் மகனுக்கு வேறு வேறு விதமாகத் துடிக்கும் சராசரி மனம். எல்லோர் வலியையும் ஒன்றுபோல் உணர்ந்தால் நீங்கள் முற்றும் துறந்த ஞானி.
எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும் அது யாருக்கு என்று பார்த்துத்தான் மனம் எதிர்வினை ஆற்றும். இப்படித் தேர்ந்தெடுத்து வேலை செய்யும் மனம் மெல்ல இறுகிவிடுகிறது.
ஆனால், எதிராளியின் மனநிலையை அறிவுபூர்வமாக மட்டும் பார்க்காமல் உணர்வுபூர்வமாகவும் கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவுவதே ‘எம்பதி’. ‘பிறர் மனதை உணரும் இந்தத் திறன்’ பற்றிய ஆராய்ச்சிகள் இன்று உளவியலில் கொட்டிக்கிடக்கின்றன. எல்லா வெற்றியாளர்களும் இந்தத் திறன் கொண்டவர்களே என்று அடித்துக் கூறுகின்றன பல சுய உதவி நூல்கள்.
‘நான் இருக்கிறேன்!’
அமெரிக்காவில் நடந்த ஒரு சுவாரசியமான மருத்துவத் துறை ஆய்வு இதை உறுதிசெய்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசும் உரையாடல்களை வைத்து எம்பதியைக் கணக்கிடுகிறார்கள். குறைந்த எம்பதி கொண்ட மருத்துவர்கள்மீது நோயாளிகளின் புகார்கள், சட்ட வழக்குகள் அதிகம் இருப்பது அதில் தெரியவருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நோயைக் குணப்படுத்தும் திறனில் இரண்டு விதமான மருத்துவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், நோயாளி மனம் அறிந்து உணர்வால் ஒன்றுபடாத மருத்துவர்கள் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன.
எம்பதி அதிகமுள்ள டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? கண்ணைப் பார்த்துப் பேசுகிறார்கள். நோயாளி பேசும்போது கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறெங்கும் கவனத்தைச் சிதறடிப்பதில்லை. சொல்வதைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதில் அளிக்கிறார்கள், எவ்வளவு அற்பமானது என்றாலும்.
நான் இருக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தை கூறுகிறார்கள். சொன்ன பிரச்சினை, சொல்லாத பிரச்சினை இரண்டையும் புரிந்துகொள்கிறார்கள். முக்கியமாகப் புன்னகைக்கிறார்கள்! எளிய விஷயங்கள் தாம். ஆனால், இதை இயல்பாகச் செய்வது அவசியம்.
ஆழ்மனத்தின் ஆசை
இன்று தொழில் உலகில் ‘Design Thinking’ மிகவும் பிரபலம். புதிய பொருட்கள், சேவைகள், தொழில்கள் தொடங்குவோர் இதை அவசியம்
கற்க வேண்டும். வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து புதிய சந்தைகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. ‘கஸ்டமர் எம்பதி’ என்பது வாடிக்கையாளர் கோரும் விஷயங்களை மட்டுமல்ல, அவர்கள் ஆழ்மனத்தில் ஆசைப்படும் பொருட்கள், சேவைகளை உருவாக்க உதவுகிறது.
வாடிக்கையாளர் நேரடியாகக் கேட்காத பல அற்புதங்களை ‘ஆப்பிள்’ மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் தந்தார். அவர் பயன்படுத்திய வடிவமைப்புச் சிந்தனைக்கு ஆதாரம் வாடிக்கையாளர் மனதை அறிவது. தோனி கடைசி ஓவரில் பதற்றம் அடையாமல் பந்துவீச்சாளரின் உடல்மொழியைக் கவனித்து சிக்ஸரைத் தூக்குகிறார். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
எம்பதி கற்க உங்களுக்கு ஒரு சிறு வீட்டுப்பாடம் தருகிறேன். இன்று உங்களிடம் சண்டை பிடிக்கும் ஆள் யாராக இருந்தாலும், உடனடியாகப் பதில் கொடுக்காமல், அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்.
அவர்களின் பிரச்சினை என்ன என்பதை யோசியுங்கள். அடிநாதமாக உள்ள விஷயம் பிடிபட்டால் அதை அவர்களிடமே கேளுங்களேன். குறிப்பாக, நீங்கள் அவர்கள் பக்க நியாயத்தை அறிய முயல்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். “இவ்வளவு சிம்பிளா?” என்று எண்ணாதீர்கள். நாம் முட்டி முட்டி திறக்கப் போராடும் பல கதவுகளுக்குச் சின்னதாய் ஒரு சாவி இருக்கும். தேடிப் பாருங்கள்!
கேள்வி : ஒரு டாக்டராக இருந்தும் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எல்லா முறைகளும் தோல்வி அடைந்துவிட்டன. குறைப்பதுகூடப் பல நேரத்தில் முடிவதில்லை. உடனடியாகப் பதற்றத்தைக் குறைக்க சிகரெட் ஒன்றுதான் வழி என்று தோன்றுகிறது. இதை விடவே முடியாதா?
பதில்: எந்த ஒரு பழக்கமும் ஏதோ ஒரு மனத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும். உங்களுக்கு வேலைப் பளு காரணமான சோர்வும் மன அழுத்தமும் என்று தெரிகிறது. அதைப் போக்க வழி செய்யுங்கள். வேலையின்போதே சற்றுப் புத்துணர்வுடன் இளைப்பாற யோகா போன்ற வேறு வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
புகை மட்டுமல்ல; எந்தப் பழக்கத்தின் அடிமையாக இருந்தாலும் “இந்தப் பழக்கம் எந்த மனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது?” என்ற கேள்விதான் மாற்றத்தின் முதல் படி.
‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்
மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
(தொடரும்)
கட்டுரையாளர்
மனிதவளப் பயிற்றுநர்
No comments:
Post a Comment