Monday, August 5, 2019

பிரியாணி 10 ரூபாய்… பரோட்டா 1 ரூபாய்… பெரியகுளத்தை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்!

எம்.கணேஷ்

வீ.சக்தி அருணகிரி

ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்ட தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ரெஸ்டாரண்டிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.


பிரியாணி வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு ரூபாய்க்கு பரோட்டா, பத்து ரூபாய்க்கு பிரியாணி வழங்கியதால், கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து பாதிக்காத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரியாணி, பரோட்ட வாங்க குவிந்த மக்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே முரளி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் அசைவ உணவகம் இன்று (04/08/2019) காலை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், முரளி ரெஸ்டாரண்டிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்படவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை ஒழுங்குபடுத்தினர். அந்த அளவிற்கு கூட்டம் அங்கே கூடியது. இது தொடர்பாக முரளி ரெஸ்டாரண்ட் உரிமையாளர் முரளியிடம் பேசிய போது, "பெரியகுளம் பகுதி மக்களில் பலருக்கு பிரியாணி என்பது பெரிய கனவாகவே இருக்கிறது. ஹோட்டல் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த போது, திறப்பு விழா நாளில், குறைந்த விலையில் மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.


பரோட்டாக்கள்

அதன் அடிப்படையில் தான், ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் கொடுத்தோம். மொத்தம் 250 பேர் சமையல் வேலைகளை பார்த்தார்கள், 7ஆயிரம் பிரியாணியும், 7 ஆயிரம் பரோட்டாவும் கொடுப்பதே இலக்கு. இறுதியில் அந்த எண்ணிக்கை சற்று அதிகமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. பலர் ஆர்வத்தோடும், ஆசையோடும் பிரியாணி, பரோட்டா வாங்கிச்செல்கிறார்கள். இதனை பார்க்கும் போது, மன நிறைவைத் தருகிறது.!" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024