Sunday, August 11, 2019

108 அத்தி வரதரை தரிசிக்க 108 வேண்டுமே! அலைமோதும் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

Added : ஆக 11, 2019 02:19

பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களின் கருத்தாக உள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள, அனந்த சரஸ் குளத்தில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடைசியாக, 1979ல், அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்திலிருந்து எழுந்தருளினார்.அடுத்து, 40 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளி, ஜூலை, 1 முதல், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.தினமும், மூன்று லட்சம் பக்தர்கள் வரை, தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் குவிவதால், அவர்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.'அத்தி வரதர், அடுத்த முறை எழுந்தருளும் போது, நாம் இருப்போமா என்பது தெரியாது; எனவே, இம்முறை எப்படியும் பார்த்துவிட வேண்டும்' என்ற வேண்டுதலில், வயதை மறந்து, அனைவரும் குவிகின்றனர். தரிசனம், 48 நாட்கள் மட்டுமே என்பதால், கூட்டம் அதிகம் குவிவதற்கு காரணமாக உள்ளது.தற்போது, மாவட்ட நிர்வாகம், 'ஆக., 16 வரை மட்டுமே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 'அனைத்து சாலைகளும், காஞ்சியை நோக்கி' என்ற வகையில், காஞ்சிபுரத்தில் வாகனங்கள் குவிகின்றன; வாகனங்களை நிறுத்தக்கூட இடம் கிடைக்கவில்லை.எப்படியும் அத்தி வரதரை தரிசித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், பக்தர்கள் பல மணி நேரம், வரிசையில் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து பக்தர்கள் குவிவதால், உள்ளூர்வாசிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வந்து, அத்தி வரதரை தரிசிக்க முடியாமல், திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.எனவே, 48 நாட்கள் தரிசனம் என்பதற்கு பதிலாக, அத்தி வரதர் தரிசனத்தை, 108 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கோவில் பட்டாச்சாரியார்கள், 'ஆகம விதிப்படி, 48 நாட்கள் தான் அனுமதிக்க முடியும்' என, கூறி உள்ளனர். ஆனால், ஏற்கனவே, 40 நாட்கள், 48 நாட்கள் என, அத்தி வரதர் தரிசன வைபவம் நடந்ததற்கு, ஆவணங்கள் உள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.கோவில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, ஆகம விதிமுறைகளின்படி, பூஜை நடப்பது வழக்கம். ஆனால், அத்திவரதருக்கு, ஆகம விதிகளின்படி பூஜை நடப்பதில்லை. முன்பு, மக்கள் தொகை குறைவு என்பதால், 48 நாட்கள் போதுமானதாக இருந்தது.இம்முறை, எப்போதும் இல்லாத அளவிற்கு, பக்தர்கள் குவிகின்றனர். அத்தி வரதரின் அருளால், ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சியும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. எனவே, 48 நாட்களை, 108 நாட்களுக்கு நீட்டிப்பது, ஆகம விதிகளுக்கு முரணாகாது என்பது, பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

எனவே, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.கூட்டம் அதிகமாக இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள், இன்னும் கோவிலுக்கு வராமல் உள்ளனர். அனைவரும் அத்தி வரதரை தரிசிக்க விரும்புகின்றனர். அதனால், கால நீட்டிப்பு செய்வதே நல்லது. கோவில் நிர்வாகமும், பட்டாச்சாரியார்களும், இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..- வி.சுகுமார், ராணிப்பேட்டை.

ஒரு மண்டலத்துக்கு அத்தி வரதர் தரிசனம் என்றார்கள். பக்தர்கள் கூட்டத்தை பார்க்கும்போது, ஒரு மண்டலம் போதாது என, தோன்றுகிறது. 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில், 108 நாட்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும்.- எஸ்.வள்ளி, சென்னை

நகருக்குள் எந்த பகுதிக்கு சென்றாலும், பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். பல லட்சம் பக்தர்கள் வருவதால், அத்தி வரதரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியவில்லை. அத்தி வரதர் வைபவத்தை நீட்டித்தால், மிகவும் நன்றாக இருக்கும்.- என்.சுனிதா, கன்னியாகுமரி
பல மணி நேரம் பயணித்து வந்த நாங்கள், அத்தி வரதரை தரிசிக்க, எட்டு மணி நேரமாக காத்துக் கிடந்ததால், நடக்கக் கூட முடியாமல் சோர்வடைந்தோம். நெரிசலில் சிக்கி, சிலர் இறந்ததாகவும் கூறுகின்றனர். சிக்கலுக்கு தீர்வு காண, தரிசனத்தை மேலும் பல நாட்கள் நீட்டிக்கலாம்.எம்.ராமராஜ், மதுரைதரிசனத்திற்கு சில நாட்களே உள்ளதால், பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகின்றனர். வரும் நாட்களில், பக்தர்கள் குவிவர் என்பதால், பெரும் நெருக்கடி ஏற்படும். கால நீட்டிப்பு செய்தால், ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.- கோ.அ.அருணேஸ்வரன், கோவை

அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு பின் தான் பார்க்க முடியும் என்பதால், பக்தர்கள் சிரமமின்றி பார்க்க, 108 நாட்களாவது, தரிசன நாட்களை நீட்டிக்கலாம்.- கே.சேது, மேலுார்.

'அத்தி வரதரை தரிசிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கூட்டத்தில், அவ்வளவு சிரமப்பட்டோம். லட்சம் பக்தர்கள், இன்னமும் தரிசிக்காமல் உள்ளனர். அவர்களும் தரிசிக்க ஏதுவாக, அத்தி வரதர் வைபவத்தை, கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.- கே.ஜெயந்தி, புதுச்சேரி
அத்தி வரதரை நாங்கள் தரிசித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது; மிகுந்த சிரமப்பட்டு தரிசனம் செய்தோம். அடுத்து வரும் நாட்களில், பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவர். நிலைமையை சமாளிக்க, கால நீட்டிப்பு செய்வது தான் தீர்வாக அமையும்.- பி.சுதாராணி, ராமநாதபுரம்.
இங்கு இருக்கிற சூழலை பார்க்கும்போது, தரிசன நாட்களை, 108 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்தால் தவறில்லை என, தோன்றுகிறது.-ஏ.முத்து, மதுரை.

முதல்வரிடம் குவியட்டும்பக்தர்களின் கோரிக்கைகள்!
இதுவரை, 80 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். மேலும், பல லட்சம் பேர் வந்த வண்ணம் உள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களுக்கு நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, பக்தர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, 'முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலகம், சென்னை -- 600009' என்ற முகவரிக்கு, கடிதம் அனுப்பலாம்; தொலைபேசியிலும் பேசலாம்.அலுவலக தொலைப்பேசி எண்: 044- - 25671764; பேக்ஸ்: 044 -- 25676929; இமெயில்: cmcell@tn.gov.in. முதல்வர் அலுவலக தொலைபேசி எண்: 044 - 25671525; பேக்ஸ் எண்: 044 - 25671441 மற்றும் இ - மெயில் முகவரி: tncmoffice@gmail.com
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...