Sunday, August 11, 2019

அனாதை உடல்கள் அடக்கம் தனி மனிதனின் தன்னலமற்ற சேவை

Added : ஆக 10, 2019 22:48





நாகப்பட்டினம் : ''நான் செய்யும் உதவி, சம்பந்தப்பட்டவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது,'' என்கிறார், தன்னலமற்ற சேவையின் மறுஉருவமாய் இருக்கும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ராஜேந்திரன். நாகை, பெருமாள் வடக்கு வீதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன், 67; கட்டட ஒப்பந்தக்காரர்.

விருது வேண்டாம்

இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட, அனாதை உடல்களை, தன் சொந்த செலவில் எடுத்துச் சென்று, ஈம காரியங்கள் செய்து, இடுகாட்டில் புதைத்து வருகிறார். இந்த சேவைக்காக, இதுவரை, யாரிடமும், 1 ரூபாய் பெற்றதில்லை என்பது, இவரின் தன்னலமற்ற சேவைக்கான எடுத்துக்காட்டு. கடந்த, 2012ல், தன் நண்பரின் உறவினர் இறந்ததால், உடலை அடக்கம் செய்ய, நாகை இடுகாட்டிற்கு சென்றார். அங்கு மனித சடலம் ஒன்றை, நாய்கள் குதறிக் கொண்டு இருந்தன. அதிர்ச்சிஅடைந்த ராஜேந்திரன், அங்கிருந்த ஊழியர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர்கள், 'அது, அனாதை பிணம். நகராட்சி ஊழியர்கள், இடுகாட்டின் ஒதுக்குப்புறமாக வீசிட்டு போயிடுறாங்க...' என, வேதனையுடன் தெரிவித்தனர்.

அன்றிலிருந்து, அனாதை உடல்களுக்கு, இறுதி சடங்கு செய்வதை, அவர் தொடர்ந்து செய்து வருகிறார். ஜாதி, மதம் பாராமல், குழந்தை, முதியவர் என, இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருக்கிறார். எய்ட்ஸ் உட்பட, கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டோர், மரணத்தை தழுவியோரை, உறவினர்கள் கூட, நெருங்கி வர தயங்குவர். அப்போதும் ராஜேந்திரன், தனி மனிதனாக, உடலை, பிணவறைக்கு சுமந்து எடுத்துச் சென்று, பாதுகாத்து, பின் அடக்கம் செய்து வருகிறார். அனாதை உடல்களை புதைப்பதற்காகவே, தனி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறார்.

அங்கு, இறுதி சடங்கு செய்தவற்கு தேவையான, சந்தனம், விபூதி, நவதானி யங்கள், சாம்பிராணி, ஊதுபத்தி, அரிசி, பன்னீர் பாட்டில்கள், துணிகள், சில்லரை நாணயங்களை சேமித்து வைத்துள்ளார். சுற்றுலா பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூருக்கு வந்து, தற்கொலை செய்தோர், கடலில் மூழ்கி, அடையாளம் தெரியாத உடல்கள், வீதியில், மருத்துவமனையில் ஆதர வற்ற நிலையில் இறந்து கிடப்போரின் உடல்களை, போலீசார் அனுமதியோடு, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்.

அங்கு, பிணவறையில், மூன்று நாட்கள் பாதுகாத்து வைக்கிறார். உறவுகள் யாரும் தேடி வராத நிலையில், போலீசாரிடம் அனுமதி பெற்று, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, ஹிந்து முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்கிறார். ஒரு சடலத்தை அடக்கம் செய்வதற்கு, குறைந்தது, 3,000 ரூபாய் செலவாகும் நிலையில், மற்றவர்களிடம் இருந்து, 1 ரூபாயோ அல்லது பொருட்களோ பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். மாதத்தில், 10க்கும் மேற்பட்ட உடல்கள் வரை அடக்கம் செய்பவர், தேவையான பணத்திற்காக, தன் நிலத்தை விற்பனை செய்து, அதிலிருந்து செலவு செய்து வருகிறார்.

இறந்தவரின் நெற்றியில் வைக்கப்படும், 1 ரூபாய், வாய்க்கரிசியில் போடும் நாணயங்களைக் கூட மற்ற வர்கள் தருவதற்கு, இவர் அனுமதிப்பதில்லை. சில அமைப்புகள், இவருக்கு விருது தர முன்வந்த போது, 'யாருக்கு உதவி செய்யுறேன்னு, எனக்கும் தெரியாது; யாரு உதவி செய்யுறதுன்னு, அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் எதுக்குங்க விருது?' என, அதையும் வேண்டாம் என, உதறியுள்ளார்.

இது குறித்து, ராஜேந்திரன் கூறியதாவது: இறந்தவர், எந்த உதவியும் கேட்பது இல்லை. நாம் செய்யும் உதவியும், அவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது. யாருக்கும் தெரியாது பலர், 'பண உதவி செய்கிறேன்' என, சொல்கின்றனர். 'அது வேண்டாம்' என, மறுத்து விடுவேன். அதேநேரம், உடல்ரீதியான உதவிகள் செய்ய, எவரும் முன்வருவதில்லை. எந்த உடலையும் எரிப்பதில்லை. சில நேரங்களில், உடல் அடக்கம் செய்து, பல நாட்களுக்கு பின், உறவினர்கள் தேடி வருகின்றனர்.

வாழும்போது, எப்படி இருக்கிறோம் என்பது, அவரவர் கையில் இருக்கிறது; இறந்த பின், என்ன நடக்கும் என்பது, யாருக்கும் தெரியாது. அதனால் தான், இந்த சேவை செய்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரை பாராட்ட, 9443526585 என்ற, மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...