அத்தி வரதர் வைபவம்; ரணகளமாக காட்சியளிக்கும் வி.ஐ.பி., வரிசை
Updated : ஆக 10, 2019 02:21 | Added : ஆக 10, 2019 02:18
காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவத்தில், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வரிசையில், முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், நேற்று, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பா.ஜ.,- - எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி சிக்கினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதரை நேற்று, பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள், ஆறு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். வி.ஐ.பி., மற்றும் வி.வி. ஐ.பி., வரிசையில் சென்றோர் தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கும் மேலானது. காரணம், இரு வகையான சிறப்பு பாஸ் வைத்திருந்தோரையும், ஒரே வழியில் அனுப்பியது தான்.
நேற்று முன்தினம், வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., வரிசையில் செல்வோருக்கு, கோவிலில், நடைமேம்பாலம் போன்ற சாய்தள பாதை அமைக்கப்பட்டது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள், பல மணி நேரம் தரிசனம் பாதிக்கப்பட்டு, அத்தி வரதரை தரிசிக்காமல், பலர், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்றும், அதே வரிசையில் ஏற் பட்ட கூட்ட நெரிசலில், சுவாமி தரிசனம் முடித்து பக்தர்கள் திரும்பி வரும் வழியில், பா.ஜ.,- - எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா ஆகியோர் சிக்கினர். இவர்களை, பாதுகாப்பு அதிகாரிகள், படாதபாடு பட்டு, வெளியே அழைத்து சென்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு உதவிக்கரம் சங்கம் சார்பில், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சிரமமின்றி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள், கிழக்கு கோபுரம் அருகே, தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வழியில் சென்று, அத்தி வரதரை தரிசித்தனர். வைபவ விழா, ஒரு வாரத்திற்குள் முடிவதால், அத்திவரதரை, கடந்தாண்டுகளில் வீற்றிருந்த அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளையும், குளத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதல் திருப்பணி குழுவினர், நேற்றும் ஆய்வு செய்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் புலம்பல்:
அத்தி வரதர் வைபவத்திற்கு, கோவிலுக்குள் உள்ள மின்தட ஒயர்கள், மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகளை ஆய்வு செய்ய செல்லும் ஊழியர்களை, போலீசார் அனுமதிப்பதில்லை என, மின்வாரிய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆய்வு பணியை மேற்கொள்ளாதால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை, போலீசார், கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment