Thursday, August 22, 2019

இழந்த தரத்தை எட்டுமா சட்டக் கல்வி?

புவி

அடுத்த மூன்றாண்டுகளுக்குப் புதிய சட்டக் கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை என்று முடிவெடுத்திருக்கிறது பார் கவுன்சில் ஆஃப் இந்தியா.

இதே போன்றதொரு முடிவை சமீபத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் எடுத்திருக்கிறது.

பி.வி.ஆர். மோகன் ரெட்டியின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஏ.ஐ.சி.டி.இ., 2020-க்குப் பிறகு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறது. இது வெறும் வேலைவாய்ப்போடு தொடர்புடைய பிரச்சினை மட்டுமல்ல. சட்டம், தொழில்நுட்பம் என்று அனைத் துத் தொழிற்கல்விப் படிப்புகளின் தரத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

வகுப்புகள் நடைபெறுவதில்லை

இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 1,500 சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள், நூலக வசதிகள் என அத்தியாவசியமான உள்கட்டமைப்பே இல்லை. சில கல்லூரிகளில் வகுப்புகளே நடப்பதில்லை. இத்தகைய கல்லூரிகளில் சேர்ந்து வகுப்புகளிலும் தேர்வுகளிலும் கலந்துகொள்ளாமலே பட்டம் பெற்று வழக்கறிஞர்களாகவும் பதிவுசெய்து கொள்பவர்கள் சட்டத் துறையின் மாண்புக்கேசுட்டிக்காட்டி கேடுவிளைவிக்கிறார்கள் என்று தொடர்ந்து நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. வகுப்புக்குச் செல்லாமலே முழுநேர சட்டப் படிப்பு படித்ததாகச் சொல்லி வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சட்டக் கல்வித் துறை தூங்கி வழியும் துறையாகவே மாறியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அரசு சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் ஆர்வம் காட்டிய தமிழக அரசு, அதே வேகத்தைப் பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காட்டவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 186 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர் குழுவை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண்களையும் விடைக் குறிப்புகளையும் வெளியிடாமலேயே பணியாணைகளை வழங்க ஆரம்பித்துவிட்டது தமிழக சட்டக் கல்வித் துறை.
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் தவிர தனியார்ப் பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்புகளை நடத்திவருகின்றன. பக்கத்து மாநிலங்களைப் போல, வகுப்புக்குச் செல்லாமல் சட்டத் துறையில் பட்டம் பெறுவதற்குத் தமிழகத்தில் வாய்ப்பில்லை. என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பக்கத்து மாநில கல்லூரிகளில் அப்படிப் பட்டங்களைப் பெறுவதற்கான வாய் 5 ப்புகள் தொடரவே செய்கின்றன. அப்படிப் பட்டம் பெறுபவர்களே நீதிமன்றப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று அறிவுறுத்தினார் நீதியரசர்
என்.கிருபாகரன். அத்தகைய போலிப் பட்டதாரிகள் நீதிமன்றப் பணிகளில் மட்டுமல்ல, தற்போது சட்டக் கல்வித் துறையிலும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திவருகிறார்கள்.

சட்டம் படிக்காமலேயே பேராசிரியரா?
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் கலைப் பாடங்களைப் பயிற்றுவித்து வந்த ஆசிரியர்கள், முழுநேரமும் சட்டக் கல்லூரிகளில் பணிபுரிந்துகொண்டே பக்கத்து மாநிலங்களில் பட்டம்பெற்று வழக்கறிஞர்களாகவும் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். ப்ரி-லா எனப்படும் சட்ட முன்படிப்பு வகுப்புகளுக்கு இவர்களை நியமிப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தமிழக சட்டக் கல்வித் துறை.
சட்ட முன்படிப்பு வகுப்புகளுக்கு சட்டம், கலைத் துறைகள் இரண்டிலும் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதே இதுவரையில் வழக்கமாக இருந்துவந்தது. ஏனெனில் சட்டம் கலந்த கலைப் பாடங்கள்தாம் தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் சட்ட முன்படிப்பின் பாடத்திட்டமாகும். தற்போது சட்டம் படிக்காதவர்களும் சட்டக் கல்லூரிகளில் பேராசிரியராகலாம் என்று விதிகளைத் திருத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தமிழக சட்டக் கல்வித் துறை.

புதிய சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதியில்லை என்று முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்திவிடாது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சட்டக் கல்வி என்பது தொழிற்படிப்பும்கூட. முழுநேரமாகச் சட்டம் பயின்றவர்களையும், நீதிமன்ற அல்லது சட்ட ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களையும் ஆசிரியர்களாக நியமிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...