Thursday, August 22, 2019

Examination

`மனப்பாடம் செய்ததன் விளைவுதான் இது’ - 1,62,323 பேர் எழுதிய `டெட்’ தேர்வில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி

சத்யா கோபாலன்

ஒரு ஆசிரியர் பணிக்கு அனைத்து விதமான அறிவும் தேவை என்பது இல்லாமல் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் மாணவர்கள் பி.எட் படித்ததன் விளைவுதான் இது.

TET Exam

ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியாக வேண்டும். 2011-ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வு (Teachers’ Eligibility Test ) நடத்தப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பப்படுபவர்கள் முதல் தாளையும் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பப்படுபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

TET Exam

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், பொதுப் பிரிவினர் 90 மதிப்பெண்ணும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்ணும் பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த ஜூன் 8-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த 1,62,323 பேர் இந்தத் தேர்வை எழுதினர். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
சுமார் ஒரு லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒருவர் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் 72 பேர் 90-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 1% பேர் மட்டுமே இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்ள கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியை தொடர்புகொண்டு பேசினோம், ``ஆசிரியர் தகுதித் தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்கள் யாரும் தற்போது தங்கள் பாடத்திட்டங்களைத் தாண்டி பிற பகுதிகளைப் படிப்பது கிடையாது. அனைவருக்கும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்யும் அறிவு மட்டுமே உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பி.எட் (B.Ed) படிக்கும் மாணவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் ஒரே நோக்கத்துடனே படிக்கிறார்கள். இதற்கு நம்முடைய கல்வி முறைதான் முக்கியமான காரணம்.

இந்த வருடம் டெட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும், பள்ளிகளில் படிக்கும்போது புளூ பிரிண்ட் என்ற ஒன்று நடைமுறையிலிருந்தது. அதைவைத்து, எந்தப் பகுதிகளைப் படித்தால் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கலாம் என்ற திட்டமிடலின்படி படித்தனர். அதன் விளைவுதான் தற்போது நாம் ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பது. புத்தகங்களையும் தாண்டி இருக்கும் விஷயங்களை அவர்கள் கற்கத் தவறிவிட்டனர்.

Teacher

ஒவ்வொரு பாடத்தையும் புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே அரசு எதிர்பார்க்கும் ஆசிரியர்களை நம்மால் உருவாக்க முடியும். கேள்வித் தாள் கடினமாக உள்ளது எனச் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடினமான வினாத் தாள்கள் மூலமே திறமையான ஆசிரியர்களை உருவாக்க முடியும். வேண்டுமென்றால் கேள்வித் தாளில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால், முற்றிலும் கேள்வித்தாள் தான் தவறு எனக் குறை கூறக் கூடாது.

இனிமேல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள், தங்களின் பாடத்தைப் புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.
இனி நெட் (NET) தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே ஆசிரியராக முடியும் என அரசு அறிவித்து வருகிறது. திறமையான ஆசிரியர்கள் வேண்டும் என்ற காரணத்தால்தான் கடுமையான விதிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டம் மாறிக்கொண்டே வருகிறது. எனவே, முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால் சிறிது கஷ்டப்பட்டே ஆக வேண்டும்.

இந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை பார்த்தாவது மாணவர்கள் கவனமாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். இப்போது எழுதிய தேர்வின் மூலம் வினாத்தாள் எப்படி இருக்கும் என மாணவர்கள் அறிந்திருப்பார்கள், இதே தேர்வை மீண்டும் மூன்று மாதம் கழித்து நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை, அதில் வெற்றி பெறுபவர்களைக் கொண்டு புதிய தர வரிசை உருவாக்கலாம், முன்பைவிட 10% அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் நமக்குத் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.

TET Exam

ஒரு ஆசிரியர் பணிக்கு அனைத்து விதமான அறிவும் தேவை என்பது இல்லாமல் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் மாணவர்கள் பி.எட் படித்ததன் விளைவுதான் இது. மற்ற துறைகளில் வேலை கிடைக்காமல் இறுதியாக ஆசிரியர் பணிக்கு வருவதாகச் சிலர் கூறுகின்றனர். அப்படி வருபவர்கள் 1% மட்டுமே இருக்கலாம். ஆனால், உண்மையில் ஆசிரியராக வேண்டும் என நினைத்துப் படிப்பவர்கள் அனைத்தையும் அறிந்தால் மட்டுமே சிறந்த ஆசிரியராகத் தேர்வாக முடியும்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...