Sunday, October 6, 2019

செல்போன் உட்பட 53 லட்சம் மின்னணு சாதனங்களை விற்று சாதனை: பண்டிகை காலத்தில் சியோமிக்கு அடித்த பம்பர்!

By DIN | Published on : 05th October 2019 05:46 PM 




இந்தியாவில் தற்போதைய பண்டிகை காலத்தில் சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி, 53 லட்சம் மின் சாதனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வரவுள்ளது. இதைக் கணக்கிட்டு அமேஸான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இணைய விற்பனை நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை அறிவித்தன. இதில், நிறைய மின் சாதனப் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது வழக்கம் என்பதால் இந்தியச் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், இந்த பண்டிகை காலத்தில் சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி 53 லட்சம் மின் சாதனப் பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து சியோமி இந்தியாவின் இணைய விற்பனைப் பிரிவு தலைவர் ரகு ரெட்டி வெளியிட்டுள்ள குறிப்பில்,

"ஆண்டுதோறும் நுகர்வோர்களை மகிழ்விக்கும் வகையிலும், ஈர்க்கும் வகையிலும் புதிய பொருட்களை விற்பனை செய்கிறோம். இந்த பண்டிகை காலம் சியோமிக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பண்டிகையை எங்களுடன் இணைந்து கொண்டாட 53 லட்ச மக்கள் முடிவு செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த காலகட்டத்தில் 38 லட்சம் சியோமி ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையாகியுள்ளது. ஃபிளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ஃபோனாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 உள்ளது. அமேஸானில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமாக சியோமி உள்ளது. இதன்மூலம், இந்த காலகட்டத்தில் ஒரு விநாடிக்கு 535 சாதனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது தெரிகிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் சியோமி நிறுவனம் 25 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024