Sunday, November 17, 2019


68 - ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா; ஒரே ஆண்டில் எட்டு படங்கள்



வி.ராம்ஜி

68-ம் ஆண்டில் எம்ஜிஆர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாகின. இதிலொரு சுவாரஸ்யம்... இந்த எட்டுப் படங்களிலும் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் இணைந்து நடிக்கத் தொடங்கினார்கள். பிறகு அடிக்கடி படங்களில், சேர்ந்து நடித்து வந்தார்கள். ஒருபடத்தில் சரோஜாதேவி நடித்திருப்பார். இன்னொரு படத்தில் கே.ஆர்.விஜயா நடித்திருப்பார். இப்படி நடிகைகள் மாறிக்கொண்டே வந்த நிலை, 68-ம் ஆண்டில் மட்டும் ஹீரோயின் ஜெயலலிதா என்றே இருந்தது.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ‘ரகசிய போலீஸ் 115’ திரைப்படம் 1968-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் வலுவாக இருந்தன. மேலும் பாடல்களும் பிரமாதமாக இருந்தன. படமும் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து, பிப்ரவரி 23-ம் தேதி, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், ‘தேர்த்திருவிழா’ வெளியானது. இதிலும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்தனர். எம்ஜிஆர் நடித்த படங்களில் சுமாரான படம், சுமாரான வசூல், சுமாரான வெற்றி எனும் பெயரைச் சம்பாதித்த படங்களில் ‘தேர்த்திருவிழா’வும் ஒன்று.



அடுத்து மார்ச் மாதத்தில், 15-ம் தேதி அன்று, இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் ‘குடியிருந்த கோயில்’ வெளியானது. இந்தப் படத்திலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி. இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் எம்ஜிஆர். டபுள் ஆக்‌ஷன் படங்கள் பொதுவாகவே எல்லா நடிகர்களுக்கும் ஹிட் கொடுக்கும் என்பதற்கேற்ப, இந்தப் படமும் எம்ஜிஆருக்கு ரொம்பவே ஹிட் படமாக அமைந்தது. நல்ல எம்ஜிஆர், கெட்ட எம்ஜிஆர் ஃபார்முலா. வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் , அப்பாவைக் கொன்றவனிடம் வளரும் எம்ஜிஆர். இதுபோதாதா திரைக்கதைக்கு!

பண்டரிபாய் அம்மா கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நாகேஷின் காமெடி, படத்துக்குப் பலம் சேர்த்தது. பாடல்கள் எல்லாமே செம ஹிட். ‘என்னைத் தெரியுமா?’, ‘நீயேதான் எனக்கு மணவாட்டி’, ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’, ‘நான் யார் நான்யார்’ என எல்லாப் பாடல்களும் சூப்பர். முக்கியமாக, எம்ஜிஆரும் எல்.விஜயலட்சுமியும் ஆடுகிற ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ சூப்பர்டூப்பர் ஹிட்டானது.

மிகச்சிறந்த நடனக்காரரான விஜயலட்சுமியுடன் ஆடுவதற்கு எம்ஜிஆர் ரொம்பவே தயங்கினார் என்றும் அவருக்காகவே நடன அசைவுகள் கொஞ்சம் இலகுவாக அமைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். இன்னொரு ஸ்பெஷல்... இந்தப் படத்தில் முதன்முதலாக, பெண் கவிஞர் ஓர் பாடலை எழுதியிருப்பார். இந்தப் படத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.




அடுத்து, ஏப்ரல் 25ம் தேதி, ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘கண்ணன் என் காதலன்’ படம் வெளியானது. இதிலும் ஜெயலலிதா ஜோடி. சுமாரான படங்களில் இதுவும் ஒன்று. பாடல்கள் நன்றாக இருக்கும்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று வரிசையாக மாதத்துக்கு ஒரு எம்ஜிஆர் படம். மே மாதம் படம் வரவில்லை. ஜூன் மாதம் 27-ம் தேதி சாணக்யா இயக்கத்தில், ‘புதியபூமி’ வெளியானது. இதிலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியே இணைந்தது. ‘சின்னவளை...’, ‘விழியே விழியே...’, ‘நான் உங்கள்வீட்டுப் பிள்ளை’ என்று பாடல்கள் எல்லாமே சூப்பர். நூறுநாள் படம்தான். ஆனால் ‘படம் கொஞ்சம் ஸ்லோவாப் போவுதுப்பா’ என்றார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியன்று, இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கத்தில், ‘கணவன்’ படம் வெளியானது. இந்தப் படத்தின் கதையை எம்ஜிஆர் எழுதியிருந்தார். ஆனால் படம் பெரிதாகப் பேசப்படவில்லை.

968-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ம்-தேதி எம்ஜிஆருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத வருடம், மாதம், நாள். எம்ஜிஆரின் 100-வது படமான ‘ஒளிவிளக்கு’ அன்றைக்குத்தான் ரிலீசானது. ஜெமினியின் பிரமாண்டத் தயாரிப்பில், சாணக்யா இயக்கினார். ஜெயலலிதாதான் ஜோடி. செளகார் ஜானகியும் நடித்திருப்பார். இவரின் நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டது.

எம்ஜிஆரின் 100வது படமான ‘ஒளிவிளக்கு’ம் சிவாஜியின் 100வது படமான ‘நவராத்திரி’யும் பெரிதாக ஓடவில்லை. இதேபோல் கமலின் ‘ராஜபார்வை’யும் ரஜினியின் ‘ஸ்ரீராகவேந்திரர்’ படமும் ஓடவில்லை.

இந்தப் படம் பின்னாளில், பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய டிரெண்டானது. படம் வந்த போதும் அதற்கடுத்த கட்டங்களிலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ பாடல் எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடியைச் சொல்வதாகப் பேசப்பட்டது. நரிக்குறவர் இன மக்களிடையே எம்ஜிஆரைக் கொண்டாட வைத்தது. சி செண்டர் மக்களிடம் ஓட்டு வங்கியாக பின்னாளில் மாறியது.

மிக முக்கியமாக, எண்பதுகளில் எம்ஜிஆர் உடல்நலம் குன்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது, ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்ற இந்தப் படத்தின் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலித்தது. தியேட்டர்களில் எந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தாலும், படம் போடுவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தில் உள்ள இந்தப் பாடல் மட்டும் ஒளிபரப்பப்படும். மக்கள் ‘தலைவா’ என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்தப் பாடலைப் பார்ப்பதற்காகவே, எந்தப் படம் என்பதே தெரியாமல் போனார்கள்.

ஆக, 68-ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த படங்கள் எட்டு. இந்த எட்டுப் படங்களிலும் ஜெயலலிதாதான் ஜோடி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024