Tuesday, November 26, 2019

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

12:20 pm Nov 26, 2019 |


மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) விஷேசமான திதியான கார்த்திகை மாத அமாவாசை திதி இன்று.

இன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது கொடுக்கவேண்டும். இதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். முன்னோர்களை நம் இருப்பிடத்திற்கு வரவழைத்து, அவர்களின் பசி, தாகம் தீர எள் கலந்த நீரை தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள் கலந்த நீரை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தைத் தணித்துக்கொள்கிறார்கள்.

ஒருவேளை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசையில் திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்குத் திதி அளித்த பலன் கிடைக்கும்.

தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும்.

ஆகவே, அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும், தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024