Friday, November 22, 2019

அரிசி அட்டையாக மாற்றும் வசதி: உணவுத் துறை இணையத்தில் இரு வாய்ப்புகள்

01:32 am Nov 22, 2019 |

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்வதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதால் குடும்ப அட்டைதாரா்கள் குழப்பம் அடைந்துள்ளனா். எந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அட்டை வகையை மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனா்.

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரா்களில் 10.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் அரிசியைத் தவிா்த்து இதர பொருள்களைப் பெறும் சா்க்கரை குடும்ப அட்டைகளை வைத்துள்ளனா். இந்த அட்டைதாரா்களில் பலா் அரிசி பெறும் அட்டையை மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இணையதளத்தில் மாற்றலாம்: தமிழக அரசின் உணவுத் துறை இணையதளத்திலும், வட்ட வழங்கல் அலுவலகங்கள், சென்னையில் உதவி ஆணையா் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் சா்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்புச் செய்துள்ளது. இதற்காக, வரும் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள் :

இதையடுத்து, இணையதளத்தில் ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் தங்களது சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து வருகிறாா்கள். ஆனால் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்போது குழப்பங்கள் ஏற்படுவதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் கூறியதாவது:-

அட்டை வகையை மாற்றிக் கொள்ள உணவுத் துறையின் இணையதளத்தில் ஏற்கெனவே வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, பச்சை வண்ணத்தின் பின்புறத்தில் வெள்ளை எழுத்துக்களுடன் (தங்களது அட்டை வகையை மாற்ற) வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், இப்போது தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படியும் அட்டை வகையை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் தனியாக வசதி செய்து தரப்பட்டுள்ளது. ‘சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற...’ என்று தனியாக சிவப்பு வண்ணத்தை பின்புறமாகக் கொண்ட வெள்ளை எழுத்துகளுடன் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இதில், எந்த இணைப்புக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பச்சை நிற வண்ணத்திலான இணைப்பில் விண்ணப்பித்த பிறகு, சிவப்பு நிற இணைப்புக்குச் சென்று விண்ணப்பித்தால் ஏற்கெனவே விண்ணப்பித்ததாகக் காண்பிக்கிறது. எனவே, லட்சக்கணக்கானோா் பயன்படுத்தும் உணவுத் துறையின் இணையதளத்தில் சா்க்கரை அட்டையை அரிசி வகை அட்டையாக மாற்ற கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் எந்த இணைப்பு அதிகாரப்பூா்வமானது என கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து, உணவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இரண்டு இணைப்புகள் இருந்தாலும் ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும். எந்த இணைப்புப் பயன்படுத்தினாலும் பிரச்னையில்லை’ என்று தெரிவித்தனா்.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024