Thursday, November 28, 2019

நான் என்ன பில்லாவா? ரங்காவா?'; சிதம்பரம் தரப்பு வாதம்

Updated : நவ 28, 2019 06:03 | Added : நவ 28, 2019 05:58

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தியின் தந்தை என்பதற்காக மட்டுமே சிதம்பரத்துக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. ஜாமின் தராமல் மறுக்க அவர் என்ன பில்லாவா? ரங்காவா?' என அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது. அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் 20ல் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று(நவ.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது: சிறையில் சிதம்பரத்துக்கு இது 99வது நாள். அமலாக்கத்துறை இதுவரை அவரிடம் விசாரணை எதுவும் நடத்தியது கிடையாது. எந்த ஒரு சாட்சியையும் அவர் எதிர்கொள்ளவில்லை. இந்த முறைகேட்டில் தொடர்புடையவனாக காட்டும் எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர் வெளிநாடு தப்ப மாட்டார்; சாட்சியையும் கலைக்க மாட்டார். ஆனாலும் இவர் ஏதோ பில்லா, ரங்கா போல இவருக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது.

'முக்கிய நபர்' என அழைப்பதால் மட்டுமே அவர் சிறையில் இருக்கிறார். கார்த்தியின் தந்தை என்பதால் மட்டுமே அவருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கபில் சிபல் வாதாடினார். ஆனாலும் அவரது வாதத்தை ஏற்காத நீதிபதிகள், சிதம்பரத்தின் காவலை டிச.,11 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024