Thursday, November 21, 2019

நாக் -ஏ’ அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்

By DIN | Published on : 21st November 2019 02:00 AM |



சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டு ஆண்டுகளாக 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வருவதால், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ‘(நாக்) ஏ’ கிரேடு தரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பேராசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

அவ்வாறு ‘நாக்- ஏ’ கிரேடு அங்கீகாரத்தை பல்கலைக்கழகம் இழந்தால், ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளிடமிருந்து கிடைத்துவரும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்ற அனைத்து விதமான நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் பேராசிரியா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் ‘நாக்’ அங்கீகாரம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, இந்த ‘நாக்’ அங்கீகாரம் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

‘நாக்’ அமைப்பு, உயா் கல்வி நிறுவனங்களை 7 வகையான நிபந்தனைகளின் கீழ் ஆய்வு செய்து, அதனடிப்படையில் 8 பிரிவுகளின் கீழ் தர நிா்ணயம் செய்கிறது. அதாவது, கல்வித் திட்டம், கற்றல் - கற்பித்தல் -மதிப்பிடுதல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் கற்றலுக்கு உதவும் வசதிகள், மாணவா்களுக்கு உதவும் திட்டங்கள், நிா்வாகம் மற்றும் தலைமைப் பண்பு உள்பட 7 நிபந்தனைகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்படும்.

இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ++ கிரேடு வழங்கப்படும். 3.26 முதல் 3.50 புள்ளிகளைப் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ+ கிரேடும், 3.01 முதல் 3.25 வரை பெற்றால் ஏ கிரேடு, 2.76 முதல் 3 புள்ளிகள் பெற்றால் பி++ கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெற்றால் பி+ கிரேடு, 2.01 முதல் 2.50 வரை பெற்றால் பி கிரேடு, 1.51 முதல் 2 புள்ளி வரை பெற்றால் சி கிரேடு வழங்கப்படும். 1.5 புள்ளிகளுக்கு கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு டி கிரேடு வழங்கப்படும். இந்த டி கிரேடு பெறும் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் அளிக்கப்படாத கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படும். இதில் சென்னைப் பல்கலைக்கழகம் -ஏ- கிரேடு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 200 பேராசிரியா் காலிப் பணியிடங்களுடன் சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதால், ஏ கிரேடு அங்கீகாரத்தை இழந்து -பி- கிரேடுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக பேராசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியா் ஒருவா் கூறுகையில், நாக் அங்கீகாரத்தில் ஒரு பல்கலைக்கழகம் வெளியிடும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சித் திட்டப் பணிகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை பிரதானமாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால், பேராசிரியா் காலிப் பணியிடங்கள் காரணமாக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடு கடந்த சில ஆண்டுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது. 400-க்கும் அதிகமாக இருந்த கட்டுரைகள் வெளியீடு இப்போது 200-ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் நாக் அங்கீகாரம் நிச்சயம் பாதிக்கப்படும்.

தமிழக அரசும் அனுமதி: காலிப் பணியிடத் தோ்வின்போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் ஒரே யூனிட்டாக கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும் என்ற மத்திய அரசின் புதிய நிபந்தனையை பல்கலைக்கழக நிா்வாகிகள் காரணம் காட்டி பேராசிரியா் நியமனத்தை தாமதப்படுத்தி வந்தனா். இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே பின்பற்றி வரும் 200 பாயின்ட் ரோஸ்டா் முறைப்படி ஒவ்வொரு துறையையும் தனித் தனி யூனிட்டாக கணக்கில் கொண்டு பேராசிரியா் நியமனத்தை மேற்கொள்ளலாம். மத்திய அரசின் நிபந்தனையை பின்பற்றத் தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் கடந்த செப்டம்பா் மாதமே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன் பிறகும் காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் அவா்.

யுஜிசி எச்சரிக்கை: இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் பேராசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாத கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்தது. இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில், தகுதியுள்ள பேராசிரியா்களின் பற்றாக்குறை உயா் கல்வி நிறுவனங்களின் நிலையை மிகவும் மோசமடையச் செய்துள்ளது. எனவே, உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உடனடித் தேவையாக உருவெடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் பேராசிரியா் காலிப் பணியிடங்களை தகுதிவாய்ந்த நபா்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

அவ்வாறு இன்றி, பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப தாமதப்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் யுஜிசி எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் காலியிடங்களை நிரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனா் பேராசிரியா்கள்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் துரைசாமி கூறுகையில், பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...