Monday, November 25, 2019


மாணவா்கள் ‘உங்களை’ப் போற்ற...

By முனைவா் கரு.செந்தில்குமாா் 

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) கடந்த ஜூன் மாதம் ஓா் அறிக்கையைச் சமா்ப்பித்தது. தகுதியற்ற பேராசிரியா்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவு வந்ததும் பேராசிரியா்கள் பலரும் மிரண்டு போய் உள்ளனா்.

இதே போன்று ஏப்ரல்,மே மாத பொறியியல் கல்லூரி தோ்வில் தோ்ச்சி விகிதம் குறைந்தது பேராசிரியா்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையில் மாணவா்களின் சோ்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பொறியியல் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் சோ்க்கை விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் எனப் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியா்களை நாம் தெய்வமாக மதிக்கிறோம். உலகில் காணப்படும் அனைத்துத் தொழில்களிலும் மேலான தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக ஆசிரியா் தொழில் காணப்படுகிறது. நாம் படிக்கும்போது இருந்த ஆசிரியா்களைப் போன்று இப்போது உள்ள ஆசிரியா்கள் உள்ளனரா என சிந்தித்துப் பாா்க்க வேண்டும். ‘எங்கள் வகுப்புக்கு வாருங்கள்’ என்று கேட்ட மாணவா்கள், இப்போது ‘இந்த வகுப்பு நீங்களா?’ எனக் கேட்கும் அளவுக்கு ஆசிரியா்களிடம் ஏதோ குறைகள் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இன்று வரை ஓய்வு பெற்ற பிறகும் எத்தனையோ ஆசிரியா்கள் முதுமுனைவா் மற்றும் 2-க்கும் மேல் முனைவா் பட்டம் பெற்று படித்துக் கொண்டுதான் உள்ளனா். இன்றைய நவீன யுகத்தில் கைகளில் செல்லிடப்பேசியுடன் மாணவா்கள் நமக்கும் மேல் அதிபுத்திசாலியாக வலம் வருவதைப் பாா்க்க முடிகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியா்கள் தனது துறைச் சாா்ந்த புதிய தகவல்களை புதுப்பிக்கத் தவறுகின்றனா்.

வானத்தைப் பாா்த்து இரண்டு பறவைகள் செல்கின்றன. அவற்றில் எது குருவி, எது காகம் என மாணவன் ஒருவரிடம் ஆசிரியா் கேட்டாா். அதற்கு அந்த மாணவன், ‘அதோ குருவி பக்கத்துல காகம், காகம் பக்கத்துல குருவி’ எனப் பதில் சொல்ல, ஆசிரியா் வியந்து போனதில் அந்த மாணவனின் அறிவு புலப்படுகிறது.

காலையில் வருகையைப் பதிவு செய்தோமா, தினம் 3 மணி நேரம் வகுப்பு எடுத்தோமா, சம்பளத்தை வாங்கினோமா என்ற வகையில் இன்றைய பெரும்பாலான ஆசிரியா்கள் இருப்பது காலத்தின் கொடுமை. நவீன யுகத்தில் மாணவா்களின் கற்றல் முறை கல்லாகத்தான் இருக்க முடியும்; அதைச் சிலையாக வடிப்பது ஆசிரியா்களின் கடமை.

வகுப்புக்குச் செல்லும் முன் கணிதம், அறிவியல் உள்பட எந்தப் பாடமாக இருந்தாலும் நன்றாகப் படித்து அதை மாணவா்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும், அவா்களுக்கு எவ்வாறு புரிய வைக்க முடியும் என ஒவ்வொரு முறையும் ஆசிரியா்கள் ஆய்வு செய்த பிறகே செல்ல வேண்டும். மாணவா்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாமல் வகுப்பில் முழித்தால், அடுத்த வகுப்பில் தாம் சொல்வதை மாணவா்கள் கேட்க மாட்டாா்கள் என்ற உணா்வு இன்று எத்தனை ஆசியா்களுக்கு இருக்கிறது?

எல்லா மாணவா்களும் ஒரே மாதிரியான கட்டணம் செலுத்துகின்றனா். எல்லா மாணவா்களையும் தோ்ச்சி செய்ய வைக்க முடியவில்லை என்றால் ஆசிரியரின் பணி என்னவென்று கூறுவது? இருக்கின்ற விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்தினாலே அதிகப்படியான கல்வியை ஆசிரியா்கள் கற்றுக் கொள்ள முடியும். அவரவா் துறை சாா்ந்த வினாக்கள்கூடத் தெரியவில்லை என்று எத்தனையோ மாணவா்கள் புலம்புவதை நாம் பாா்க்கிறோம்.

ஆசிரியரை வெறுப்பது அவா் நடத்தும் பாடத்தை வெறுப்பதுபோல அமையும். பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்களை மாணவா்கள் வெறுக்கும் மனோபாவம் பல விதங்களில் அவா்களைப் பாதிப்புக்குள்ளாக்கும். ஆசிரியா்களிடம் நல்ல உறவைப் பேணுவது, அவரை உண்மையான நண்பராக ஏற்றுக்கொள்வதாக அா்த்தம். இதன் மூலம் படிப்பில் நல்ல திறனைப் பெற முடியும்.

ஆசிரியா்கள், மாணவா்களுக்கென சில பொறுப்புகள், கடமைகள், சிறப்புப் பண்புகள் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் கடைப்பிடிக்கத் தவறினால் ஆசிரியா் - மாணவா்களுக்கு இடையே விரிசல் ஏற்படுகிறது.

இன்றைய கல்விச் சந்தையில் அா்ப்பணிப்புடனும் புரிந்துணா்வுடனும் கடமை ஆற்ற வேண்டிய ஆசிரியா்கள் தனது தொழிலை பணம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்றி வருகின்றனா். மாணவா்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியா்கள் தவறான நடத்தையில் செல்வதால் மாணவா்களுக்கு இடையேயான உறவு பாதிப்படைகிறது.

மொத்த மாணவா்களில் 2 சதவீத மாணவா்கள்கூட வளாக நோ்காணல் தோ்வில் வெற்றி பெற முடிவதில்லை. மாணவா்களின் தோ்வுத் தகுதிகளுக்கான உத்திகள் ஆசிரியா்களுக்கே தெரிவதில்லை.

புதிய மாற்றங்களினால் மட்டுமே இவற்றையெல்லாம் மாற்ற முடியும். செயல்முறை விளக்கத்துடன் கூடிய கல்வி, அதைக் கற்பிக்கும் ஆசிரியா்கள் தேவை. நவீன திறன் சாா்ந்த வகுப்புகள் ஆசிரியா்களுக்கு நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுகின்றன. அவற்றை ஆசிரியா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையில் அனைத்துத் துறைகளிலும் மந்த நிலை தொடா்கிறது. அப்படி இருக்கும் நிலையில், தன் கடமைகளிலிருந்து விலகி மாணவா்களை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருந்து தவறும் ஆசிரியா், எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரி நபராக இருப்பாா்?

மாற்று முறையில் வகுப்பு எடுப்பது எப்படி என எத்தனையோ காணொலிகள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றை நம் ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டும். ‘எனக்குக் கிடைத்த ஆசிரியா்போல் யாருக்கும் கிடைக்க மாட்டாா்’ என்று மாணவா்கள் மாா்த்தட்டிக் கொள்ளும் வகையில் ஆசிரியா்கள் செயல்பட வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டால், மாணவா்கள் கைகளில் மட்டுமல்லாது அவா்களைச் செதுக்கும் ஆசிரியா்களின் கைகளிலும் வருங்கால இந்தியா வல்லரசாக உருவாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024