Tuesday, November 26, 2019

பாரசிட்டமாலை விட மிகச்சிறந்த வலிநிவாரணியா பீர்? வெளிவந்தது புதிய ஆய்வு முடிவு..
11:49 am Nov 26, 2019 | RKV


இனிமேல் கடுமையான தலைவலி என்றால் நீங்கள் பாராசிட்டமால் உள்ளிட்ட வலிநிவாரணிகளைத் தேடி ஓட வேண்டியதில்லை. நேராக ஒரு டின் பீர் வாங்கி உடைத்து ஒரே ‘கல்ப்’பில் இரண்டு கிளாஸ் பீர் அடித்தீர்கள் என்றால் போதும் தலைவலி போயே போச்சு, இட்ஸ் கான், போயிந்தி! இதை நான் சொல்லவில்லை கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதாகப்பட்டது என்னவென்றால்? கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் 18 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர், அப்போது அவர்களுக்குத் தெரிய வந்தது 2 pint (கிட்டத்தட்ட 2 கிளாஸ்) அளவுக்கு பீர் அருந்தினால் 25% வலிநிவாரணம் கிடைக்கிறது என. அதாவது, பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை உட்கொள்ளாமல் வெறும் பீர் அருந்தியே வலி நிவாரணம் பெற முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது ஆல்கஹால் மிகச்சிறந்த வலிநிவாரணியாகச் செயல்படுவதை கண்டறிய முடிந்தது. மிகத்தீவிரமான வலிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க மருத்துவ ரீதியாகவும் ஆல்கஹால் உதவுவதை இந்த ஆய்வின் மூலமாக நிறுவ முடிந்தது என அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தொடர்ச்சியாக வலி இருப்பவர்கள் நீண்டகால வலி நிவாரணியாக இதையே எடுத்துக் கொள்ளத் தொடங்கினால் ஆரோக்கியத்துக்கு எதிரான விளைவுகளையும் இது கொண்டிருக்கிறது என்பது இதன் பாதகமான அம்சங்களில் ஒன்று.

ஆனால், இங்கு மற்றும் இரு முக்கியமான விஷயங்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவை என்னவென்றால்?

மிதமான அளவில் பீர் அருந்துவதால் முதலில் இரத்த ஆல்கஹால் அளவை 0.08 சதவிகிதம் உயர்த்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.   அடுத்ததாக, பீர் நமது உடலுக்கு வலியைத் தாங்கக்கூடிய திறனைத் தருவதால் வலி குறைந்தது போல நம்மால் உணர முடியும்.

லண்டனின் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய டாக்டர் ட்ரெவர் தாம்சன் மேலும் ஆய்வு குறித்துக் கூறுகையில், “ஆல்கஹால் ஒரு சிறந்த வலி நிவாரணி மருந்து என்பதற்கான வலுவான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதை கோடீன் போன்ற ஓபியாய்டு மருந்துகளுடன் ஒப்பிடலாம் மற்றும் இதன் விளைவு பாராசிட்டமாலை விட சக்தி வாய்ந்தது. " என்கிறார்.

இந்த ஆய்வு முடிவின் மூலம் ஒரு விஷயம் உறுதியாகியிருக்கிறது. வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வதை விட பீர் அருந்துவதென்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவு உண்மைதான், ஆனால் பீர் வேறு பல பக்க விளைவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் முன் எப்படி மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பீர்களோ? அதே போல பீர் அருந்துவது குறித்தும் உங்களது குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே இத்தகைய வலி நிவாரண முறையைப் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...