Thursday, November 28, 2019

கணினி உதவியாளர்கள் கூண்டோடு மாற்றம்: லஞ்ச புகாரால் பதிவு துறையில் நடவடிக்கை

Added : நவ 27, 2019 22:04

சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச முறைகேடுகளுக்கு துணைபோகும் கணினி உதவியாளர்களை, ஒட்டுமொத்தமாக மாற்ற, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவு பணிகளுக்காக, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.'ஆன்லைன்' பத்திரப்பதிவு திட்டம் துவங்கப்பட்டபோது, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒருவர் வீதம், டி.சி.எஸ்., நிறுவனம் வாயிலாக, கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆன்லைன் முறை பத்திரப்பதிவு பணியில், சார் - பதிவாளர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியாக உதவுவதே, கணினி உதவியாளர்களின் பணி. பெரும்பாலான அலுவலகங்களில், உரிய பொறுப்புக்கு மீறிய நிலையில் செயல்படுவதாக, இவர்கள் மீது புகார் எழுந்தது.மேலும், தரகர்களின் பிரதிநிதிகளாக, பெரும்பாலான கணினி உதவியாளர்கள் செயல்படுவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, சமீபத்தில்நடந்த, ஆன்லைன் பத்திரப்பதிவு குறைபாடுகள் குறித்த, உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கணினி உதவியாளர்களை, ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆன்லைன் பத்திரப்பதிவு துவங்கும்போது, இப்பணிக்கு புதிய நபர்களை, டி.சி.எஸ்., நிறுவனம் அளிக்கவில்லை.பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், தினக் கூலிகளாக பணியில்இருந்தவர்களே, பரிந்துரை அடிப்படையில், கணினி உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனால், சார் - பதிவாளர்களை தாண்டி, இவர்கள் வசூல் மையங்களாக செயல்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, முதல்கட்ட நடவடிக்கையாக, சார் - பதிவாளர்களிடம் இருந்து பரிந்துரை பெறப்பட்டு, இவர்கள் மாற்றப்படுவர்.அதன்பிறகும் புகார்கள் வந்தால், டி.சி.எஸ்., நிறுவனத்திடம் கூறி, இவர்கள் நீக்கப்படுவர். இதற்கான, நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024