Thursday, November 28, 2019

மதுரை காமராசர் பல்கலை பொறுப்பு பதிவாளரின் காலநீட்டிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு
மதுரை

28.111.2019

காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு வகிக்கும் ஆர்.சுதாவுக்கு கால நீடிப்புக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளராக பணிபுரிந்த சின்னையா சில மாதத்திற்கு முன்பு, பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக நிரந்தர பதிவாளர் நியமிக்கும் வரை அதே பல்கலைக்கழக பிரெஞ்ச் துறை பேராசிரியை ஆர். சுதா என்பவரை பொறுப்பு பதிவாள ராக நிர்வாகம் நியமித்தது.

இதைத் தொடர்ந்து நிரந்தர பதிவாளர் நியமனத்துக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன், வெளியிடப்பட்டது. தகுதியான நபர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தகுதிப் பட்டியலும் தயாரித்து, நேர்காணல் நடத்த இரு முறை தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், சில நிர்வாக காரணத்தால் நேர்காணல் இதுவரை நடக்கவில்லை.

இந்நிலையில் பல்கலை பதிவாளர் பதவிக்கான ஓய்வு பெறும் வயதை எட்டிய நிலையிலும், பேராசிரியை ஆர்.சுதா தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிக்கிறார்.

சிண்டிக்கேட் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே நிரந்தரப் பணியில் இருந்த பதிவாளர் சின்னையாவுக்கு 58 வயதில் பணி ஓய்வு அளிக்கப்பட்டது.

அதே போன்று சுதாவுக்கும் ஏன், ஓய்வு அளிக்கவில்லை என பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. இது தொடர்பாக காமராசர் பல்கலைக் கழகநிர்வாக அலுவலர்கள் சங்கம் கடந்த 22-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், உயர்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதில், ‘‘ 58 வயதை கடந்த பொறுப்பு பதிவாளர் சுதாவுக்கு பணி ஓய்வு அளிக்கவேண்டும். அவருக்கு கால நீடிப்பு செய்யக்கூடாது. இது போன்ற நடவடிக்கை பல்கலை நிர்வாக விதிக்கு முரணாகும். நிரந்தர பதிவாளர் பொறுப்பு வகித்த சின்னையா உரிய நேரத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.

அவரை உதாரணம் காட்டி பேராசிரியை சுதாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும். சிண்டிக்கேட் உறுப்பினர்கள் முடிவு செய்தாலும் நிர்வாக ரீதியாக துணை வேந்தர் பல்கலை நடைமுறை விதிகளை பின்பற்றவேண்டும், ’’ என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பல்கலை அலுவலர்கள் சங்கத்தினர் கூறியது:

பல்கலையில் பதிவாளர் பொறுப்பு என்பது முக்கியமானது. பொதுவாக இப்பதவியில் இருப்போருக்கு 58 வயது வரை பணியில் இருக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனாலும், பொறுப்பு வகிக்கும் சுதாவுக்கு நவ., 23ல் முதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிரந்தர பதிவாளரை நியமிக்கும் நடவடிக்கை தொடர்ந்து தாமதமாகிறது. அதற்கான பட்டியல் தயாரித்தும், நேர்காணல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேர்காணல் குழுவில் அரசு சார்பிலான பிரதிநிதி ஒருவர் இடம் பெறவேண்டும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், அதற்கான முயற்சி மேற்கொள்ளவில்லை. இது பற்றி அரசாணை இருக்கிறது என்றால் அதை வெளியிடவேண்டும். சமீபத்தில் நடந்த சிண்டிக்கேட் கூட்டத்தில் பொறுப்பு பதிவாளாரே தொடர்ந்து நீடிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த விஷயத்தில் ஒருசிலரின் கருத்துக்கு பிறகு சிண்டிக்கேட் உறுப்பினர்களும் ஒத்துழைப்பது தவறான முன்மாதிரியை ஏற்படுத்திவிடும்.

எனவே, நிரந்தரப் பதிவாளரை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். நிரந்தரப் பதிவாளர் இன்றி, பல்கலையில் புதிய நியமனம் அறிவிப்பு உள்ளிட்ட சில பணியில் தொய்வு நிலை ஏற்படும் சூழலும் நிலவுகிறது. துணைவேந்தர், உயர் கல்வித்துறை செயலர் இதில் கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024