Thursday, November 14, 2019



`ராணுவத்தில் வேலை, இரவு உணவு தேவை!' - மர்ம நபரின் மோசடியால் கொதிக்கும் கும்பகோணம் ஹோட்டல்கள்

கே.குணசீலன்  vikatan 14.11.2019

கும்பகோணத்தில் உள்ள ஹோட்டல்களில் செல்போனில் பேசிய மர்ம நபர் ராணுவத்தில் பணிபுரிவதாகக் கூறி உணவு ஆர்டர் கொடுத்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணில் இருந்த புகைப்படம்

ராணுவத்தில் பணிபுரிவதாகக் கூறி ஹோட்டல்களில் உணவை ஆர்டர் செய்து நூதன மோசடி செய்த நபரால், கொந்தளிக்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.

`கோயில் நகரம்' என்று அழைக்கப்படுகிற கும்பகோணத்துக்கு இந்தியா முழுவதுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களாக கும்பகோணத்தில் உள்ள சில சைவ மற்றும் அசைவ ஹோட்டல்களை செல்போன் மூலம் தொடர்புகொள்ளும் நபர் ஒருவர், `நாங்கள் ராணுவத்தில் பணிபுரிகிறோம் எங்களுக்கு இரவு உணவு தேவைப்படுகிறது' என இந்தியில் பேசி ஆர்டர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

உணவு தயாரான பிறகு கடை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொண்டு, `சாப்பாடு ரெடியாக இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறினால், `நாங்கள் ரயிலில் வந்து கொண்டிருக்கிறோம், உங்கள் ஏ.டி.எம் கார்டு விபரம் இருந்தால் சொல்லுங்கள். ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்திவிடுகிறேன். வேறு ஒருவர் வந்து உணவை எடுத்துச் செல்வார்' எனக் கூறியதை நம்பி ஊழியர்களும் ஏ.டி.எம் நம்பரைக் கொடுத்துள்ளனர்.

பின்னர், மீண்டும் போன் செய்யும் அந்த மர்ம நபர், `உங்கள் செல் நம்பருக்கு ஓ.டி.பி வந்திருக்கும். அதைச் சொன்னால்தான் பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும்' எனக் கூற, ஹோட்டல் ஊழியர்களும் ஓ.டி.பி நம்பரைக் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து போனில் பேசிய மர்ம நபர்கள் ரூ 20,000 எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பணம் போனது ஒருபுறம், ஆயிரக்கணக்கில் மதிப்புடைய பார்சல் கட்டப்பட்ட உணவு வீணாவது மறுபுறம் என இரட்டிப்பு நஷ்டம் ஏற்பட்டதை ஹோட்டல் ஊழியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படி ஏமாந்துவிட்டோமே என யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் புகார் தெரிவித்தோம்.ஹோட்டல் உரிமையாளர்

இந்த நூதன மோசடி குறித்து ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். ``மகாமகம் குளக்கரை அருகே உள்ள சைவ ஹோடல்கள், தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அசைவ ஹோட்டல் ஆகியவற்றின் செல் நம்பருக்கு அழைத்த மர்ம நபர் ஒருவரால் நாங்கள் மிகவும் நஷ்டப்பட்டுவிட்டோம். இப்பகுதியில் பல மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருவதால் ஓரளவுக்கு இந்தி பேச தெரிந்த நபர்கள் ஒவ்வொரு ஹோட்டலிலும் இருப்பது மோசடி நபர்களுக்கு வசதியாகிவிட்டது. மர்ம நபர் அழைத்த வாட்ஸ்அப் எண்ணில் மூன்று பேர் ராணுவ உடையில் இருக்கும் போட்டோ உள்ளது. அவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள்போல் இருக்கிறார்கள்.

ராணுவ உடையில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ஊழியர்களும் உண்மையென நம்பிவிட்டனர். அந்த ஊழியரின் செல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வந்த பிறகுதான் மோசடி செய்யப்பட்டதே தெரிய வருகிறது. இதேபோல் இன்னும் சில ஹோட்டல்களில் பேசி வங்கிக் கணக்கில் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.

மகாமக குளம்

இப்படி ஏமாந்துவிட்டோமே என யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் புகார் தெரிவித்தோம். அனைத்து ஹோட்டல்களுக்கும் அந்த போட்டோவையும் அந்த நபர் பேசிய ஆடியோவையும் அனுப்பி, `இதுபோன்று பேசினால் யாரும் ஏ.டி.எம் விவரத்தைத் தந்து ஏமாந்துவிடாதீர்கள், இவர்கள் மோசடி நபர்கள்' என எச்சரிக்கை செய்வதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

ராணுவத்தின் பெயரைச் சொல்லும் இவர்கள் உண்மையிலேயே அங்கு பணி செய்கிறார்களா இல்லையா... அது அவர்களுடைய போட்டோதானா என்பதைக் கண்டறிய காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார் வேதனையுடன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024