Monday, November 18, 2019

`போனை பிடுங்கி எறிந்து விடலாமா?'- ராமதாஸை சோதிக்கும் பிஎஸ்என்எல்!

``லேசாக மழை தூறினாலும் அவற்றுக்கு காய்ச்சல் வந்து செயலிழந்து விடும். எத்தனைமுறை சரி செய்தாலும் நிரந்தமாக குணமாகவில்லை. எத்தனையோ தொழில்நுட்பம் வந்தாலும் இவ்வளவு மோசமாக சேவை செய்தால் எப்படி முன்னேறும்"
ராமதாஸ்

கடந்த நிதியாண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.13,804 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. அதிக நஷ்டத்தைச் சந்தித்த அரசு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் முதலிடத்தில் இருந்தது. கடந்த சில வருடங்களாகவே இப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எனினும் ஓரளவுக்கு நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நிறுவனத்தில் பணிபுரியும் 50 வயதைக் கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல ஆயிரம் ஊழியர்கள் விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பிஎஸ்என்எல் சிம் ஆக்டிவேசன்: காவல்துறைக்கே இந்த கதின்னா..?!

ஆனால் இதுவல்ல இப்போதைய செய்தி. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தனக்கு ஏற்பட்ட சோகத்தை மூன்று பாயிண்டுகளாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். ராமதாஸுக்கு சொந்தமான தைலாபுரம் தோட்டத்தில் கடந்த மாதம் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அப்போதே தனது ட்விட்டர் மூலம், ``எனது தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு இரு BSNL தரைவழி இணைப்புகள் உள்ளன. லேசாக மழை தூறினாலும் அவற்றுக்கு காய்ச்சல் வந்து செயலிழந்து விடும். எத்தனைமுறை சரி செய்தாலும் நிரந்தமாக குணமாகவில்லை. எத்தனையோ தொழில்நுட்பம் வந்தாலும் இவ்வளவு மோசமாக சேவை செய்தால் எப்படி முன்னேறும் பிஎஸ்என்எல்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்பின் சேவை சரிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எதிராக தற்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ராமதாஸ். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``தைலாபுரம் தோட்டத்திலுள்ள பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு அடிக்கடி பழுதடைந்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன். அதை தொடர்ந்து வந்த அதிகாரிகள் சரி செய்தனர். அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பழுதாகிவிட்டது. பழுதடைவதில் வேகம் என்றால் அது பிஎஸ்என்எல் தான்.

உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள். அந்த வரிசையில் பிஎஸ்என்எல் சேவை மட்டும் தான் மாறாதது.... தேறாதது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை வெறுக்க வைக்கும் வகையில் மோசமான சேவைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல். நான் தரைவழி தொலைபேசியை நேசிப்பவன். ஆனால், எனது இல்லத்தில் உள்ள பிஎஸ்என்எல் தரைவழி இணைப்புகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து விடலாமா? என்ற அளவுக்கு அதன் சேவை என்னை சோதிக்கிறது. இதே நிலை நீடித்தால் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் கட்டாய ஓய்வு நிச்சயம்!" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024