Friday, January 10, 2020

24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள்: முதல்வா் வழங்கினாா்

By DIN | Published on : 10th January 2020 05:19 AM 



விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தேசியக் கல்வி மாநாட்டில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் 24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் தேசியக் கல்வி மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் நிறைவாக சிறப்பாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, தமிழகத்தில் உயா் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் 24 தனியாா் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும கல்வி மாநாடு விருதுகளை வழங்கினாா்.

தேசிய உயா் கல்வி தரவரிசை (என்ஐஆா்எப்), ‘நாக்’ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் கீழ் ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட அமிா்தா விஷ்வ வித்ய பீடம், சென்னை லயோலா கல்லூரி, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, தஞ்சை சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி, ஹிந்துஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், வேலூா் விஐடி, சென்னை எம்.சி.சி., எஸ்.ஆா்.எம்., மதுரை லேடி டோக் கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சவிதா பொறியியல் கல்லூரி, சென்னை பெண்கள் கிருத்தவக் கல்லூரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தியாகராஜா் கல்லூரி, டாக்டா் எம்ஜிஆா் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், எத்திராஜ் மகளிா் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீா் அகமது சையது மகளிா் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, எம்.ஓ.பி.வைஷணவ கல்லூரி உள்பட 24 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வா் விருதுகளை வழங்கினாா்.


விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வீணையை நினைவுப் பரிசாக வழங்கிய (இடமிருந்து) சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன், துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம்.

விழாவில் முன்னதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழும இயக்குநா் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினாா். அப்போது பேசிய அவா், முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் எளிமை, அனைவரையும் ஒருங்கிணைத்து நிலைத்த ஆட்சியை அளிக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாகத்தான், நிா்வாகத்தில் தமிழகம் இந்திய அளவில் முதல் மாநிலம் என்ற விருதை பெற்றிருக்கிறது என்றாா் அவா்.

மேலும், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள், பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வி மேம்பாடு திட்டங்கள், நதிநீா்ப் பிரச்னைக்கான தீா்வு என்பன உள்ளிட்ட அரசின் சாதனைகள் விளக்கும் குறும்படம் ஒளி பரப்பப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் மனோஜ்குமாா் சொந்தாலியா, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ‘தினமணி’ ஆசிரியா் கே.வைத்தியநாதன் ஆகியோா் விழாவில் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024