Sunday, January 5, 2020

`50 ரூபாய்க்கு 50 மில்லி!’- தஞ்சையில் கழுதைப் பால் விற்பனை அமோகம்

கே.குணசீலன்

``கழுதைப் பாலில் பல நன்மைகள் இருப்பதால் மாட்டு பசும் பாலை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாங்கி குடிக்கின்றனர். இதில் வரும் வருமானத்தில் கழுதைகளை முறையாக பராமரித்து நாங்களும் வாழ்த்து வருகிறோம்”

தஞ்சாவூர் மாவட்டம், பெரம்பலூர் பகுதி தொழுதூரிலிருந்து 20 -க்கு மேற்பட்ட குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட கழுதைகளுடன் டென்ட் அடித்து தங்கியுள்ளனர். இவர்கள் பகல் நேரங்களில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொருவரும் ஒரு கழுதையுடன் தனித்தனியாக `பால்... கழுதை பால்’ என கூவிக் கொண்டே பல பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

கழுதைப் பால் குடித்தால் உடலில் உள்ள பெரும்பாலான நோய்கள் நீங்கும். அத்துடன் எந்த நோயும் உடலை தாக்காது. கைக்குழந்தை முதல் பல்லு விழுந்த பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம் என சொல்கின்றனர். இதைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கழுதைப் பாலை வாங்கி குடித்து விட்டு, தங்கள் குழந்தைகளையும் குடிக்க வைக்கின்றனர். பலர் கழுதைப் பாலை குடிக்கலாமா என அருவருப்பாகவும் பார்த்து விட்டு செல்கின்றனர். கழுதைப் பால் அப்பகுதியில் அமோக விற்பனையாகி வரும் நிலையில் இந்த பால குடிக்கலாமா குடிக்க கூடாதா என்கிற அச்சமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கழுதைப் பால் விற்பவரிடம் பேசினோம், ``எங்களுக்கு பரம்பரை பரம்பரையாக கழுதை வளர்த்து அதன் பாலை விற்பது தான் தொழில். கும்பலாக தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்கேயே ஒரு மாதம் வரை தங்கி கழுதைப் பாலை விற்பது வழக்கம். இதில் வரும் வருமானத்தை வைத்து தான் வாழ்கை நடத்தி வருகிறோம். கழுதைப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்த்துமா, இருமல், பல விதமான தோல் நோய், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருந்தால் அவை உடனே குணமாகி விடும். பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கும் இந்த பாலை கொடுக்கலாம்.

அப்படி கொடுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை பருகினால் உடலில் எந்த நோய் தாக்குதலும் வராது. நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று எந்த கலப்படமும் இல்லாமல் உடனுக்குடன் கறந்து தருகிறோம். 50 மில்லி கழுதைப் பால் 50 ரூபாய்க்கு விற்கிறோம். கழுதைப் பாலில் பல நன்மைகள் இருப்பதால் பசும் பாலை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாங்கி குடிக்கின்றனர். இதில் வரும் வருமானத்தில் கழுதைகளை முறையாக பராமரித்து நாங்களும் வாழ்த்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, ``கழுதைப் பால் குடித்தால் நோய்கள் தீரும் என்பது மூட நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு தான் பசும்பாலே கொடுக்கப்படுகிறது. ஆனால், மூன்று நாள்களில் கழுதைப் பாலை கொடுக்கலாம் என்கிறார்கள். கட்டாயமாக குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுக்க கூடாது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரியவர்களும் இதை வாங்கி குடிக்கின்றனர்” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024