Sunday, January 5, 2020

வைகுண்ட வாசல் திறப்புக்குத் தயாராகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்... பக்தர்கள் கவனத்துக்கு!

மு.முத்துக்குமரன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். எதிரே நம்மாழ்வாருக்கு அருளியவாறே பரமபத வாசல் வழியாகப் பெருமாள் எழுந்தருளுவார்.


பெருமாள்

உலகளந்த பெருமாளைத் தரிசிப்பதற்கு உகந்த காலம், மார்கழி. குறிப்பாகப் பகல்பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் இந்த ஏகாதசித் திருநாள், பெருமாளுக்கு மிகுந்த சிறப்புடையது. நாளை, வைகுண்ட ஏகாதசி. 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும்.

பெருமாள்

சென்னையில் அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வைபவம் நாளை அதிகாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த வைபவத்தையொட்டி திருக்கோயிலில் இன்று நள்ளிரவு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அடுத்து, அதிகாலை 2 மணிவரை தனுர் மாத பூஜை நடக்கும்.

அதிகாலை 2.15 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி வைர அங்கியோடு மகாமண்டபத்தில் எழுந்தருளுவார். உற்சவருக்கு அலங்காரம் நடைபெறும். பின்னர் 4 மணியளவில் பெருமாள் உள்பிராகத்தை வலம் வருவார். சொர்க்கவாசல் சரியாக அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்படும். எதிரே நம்மாழ்வாருக்கு அருளியவாறே பரமபத வாசல் வழியாகப் பெருமாள் எழுந்தருளுவார்.

பெருமாள்

உற்சவர், பரமபத வாசல் கடந்து திருவாய்மொழி மண்டபத்தில் வீற்றிருப்பார். கட்டண அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் தரிசனம் செய்வார்கள். பொது தரிசன பக்தர்கள், அதிகாலை 6 மணிமுதல் பெருமாளைத் தரிசிக்க மேற்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.

சொர்க்க வாசல் கடந்து சுவாமியை தரிசித்த பின்னர் கிழக்குக் கோபுரம் வழியாகத் திரும்பலாம். பொது தரிசனம் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அன்றைய தினம் நள்ளிரவில் நம்மாழ்வாருடன் உற்சவர் வீதியுலா வருவார்.

பெருமாள்

விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவர் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் திருக்கோயில் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும், பரமபத வாசல் திறப்பு வைபவத்தைக் கண்டுகளிக்க எல்.இ.டி, திரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024