Monday, January 6, 2020

10:00 மணிக்குள் பதவியேற்பு விழா: ஆணையம் உத்தரவு

Added : ஜன 06, 2020 01:11

சென்னை : 'உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவை, காலை, 10:00 மணிக்குள் நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 91 ஆயிரத்து, 975 பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சில இடங்களில், முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், இன்று பதவி ஏற்கின்றனர். தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விழா, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பதவியேற்பு விழாவை, காலை, 10:00 மணிக்குள் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், ஊராட்சி தலைவர் தாமாக பதவியேற்க வேண்டும். பின், ஊராட்சி தலைவர் முன்னிலையில், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டும்.மாவட்ட கவுன்சிலர் அல்லது ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்பின் போது, அதிலுள்ளமூத்த உறுப்பினரை, முதலில் பதவி ஏற்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அழைக்க வேண்டும்.

அதன்பின், பதவி ஏற்ற மூத்த உறுப்பினர் முன்னிலையில், மற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு வாரியாக பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்பு குறித்த விவரங்களை, ஊராட்சி கூட்ட நடவடிக்கைக்கான புத்தகத்தில் பதிய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024