Monday, January 20, 2020

சென்னைக்கு படையெடுத்த வாகனங்கள்

Added : ஜன 19, 2020 23:46


சென்னை:பொங்கல் விடுமுறை முடிந்ததால், சென்னைக்கு படையெடுத்த வாகனங்களால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வேலை காரணமாக சென்னையில் வசிக்கின்றனர். கல்வி காரணமாக, மாணவ - மாணவியரும் சென்னையில் தங்கி உள்ளனர்.பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை வந்தது. எனவே, பொங்கல் கொண்டாட்டத்திற்கும், தொடர் விடுமுறையை கழிப்பதற்கும், இவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று வழக்கம் போல் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளன. இதற்காக, சொந்த ஊர் சென்றவர்கள், நேற்று பிற்பகல் முதல் சென்னைக்கு படையெடுக்க துவங்கினர்.இதனால், சென்னை - திண்டுக்கல், சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன நெரிசல் அதிகரித்தது. சுங்க கட்டணம் செலுத்த, ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்தன.

இதனால், பல இடங்களில் நேரடியாக பணம் வசூலிப்பு மட்டுமின்றி, 'பாஸ்டேக்' முறையில் கட்டணம் வசூலிப்பதிலும், சிக்கல் எழுந்தது. கட்டணம் வசூலிக்கும் எலக்ட்ரானிக் சென்சார் கருவிகள் வேலை செய்யாததால், வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடிகளில் விடிய விடிய வாகனங்கள் நின்றதால், முன்கூட்டியே திட்டமிட்டும், குறித்த நேரத்திற்கு சென்னை திரும்ப முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024