பல்கலை காலியிடங்கள் நிரப்ப அனுமதி
Added : ஜன 20, 2020 00:58
வேலுார்:''பல்கலைக் கழகங்கள், காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
வேலுாரில், நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்கள், விண்வெளி ஆய்வை மேற்கொள்ள, குறைந்த செலவில், பலுான் மூலம் செயற்கைக் கோள் பறக்க விடப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,058 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரச்னை சரி செய்யப்படும். கல்லுாரிகளில், 2,031 காலி பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு நடத்தப்படும். பல்கலைக் கழகங்களில் காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தை சீர்மிகு பல்கலையாக அறிவித்து, ஐந்தாண்டுகளில், 1,000 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.ஆனால், இதற்கு, 2,570 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கும் முடிவை, அவசரப்பட்டு எடுக்க மாட்டோம்.அதற்காக, ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வு செய்து வருகிறோம். பொறியியல் கல்லுாரிகளுக்கு, 'நீட்' தேர்வு நடக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment