இழுத்தடிப்பு! 'நிர்பயா' குற்றவாளி மீண்டும் கருணை மனு; ஜன., 22ல் தூக்கு தண்டனை நிறைவேறுமா?
Updated : ஜன 16, 2020 00:02 | Added : ஜன 15, 2020 22:56
புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள 'வாரன்டு'க்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. 'அதே நேரத்தில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம்' என கூறியுள்ளது. இந்த நிலையில், 'திட்டமிட்டபடி, ஜன. 22ல் தண்டனை நிறைவேற்ற முடியாது' என டில்லி அரசு கூறியுள்ளது.
டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 2012ல் ஆறு பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்தரவதை செய்யப்பட்ட அவர் பஸ்ஸில் இருந்து துாக்கி வீசப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரை மூன்று ஆண்டுகள் சிறார் சிறையில் அடைக்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்தார். இந்த வழக்கில் முகேஷ் 32 வினய் சர்மா 26 அக் ஷய் குமார் சிங் 31 பவன் குப்தா 25 ஆகியோருக்கான துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
நால்வருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டில்லி நீதிமன்றம் சமீபத்தில் வாரன்ட் பிறப்பித்தது. அதன்படி 'ஜன. 22ம் தேதி டில்லி திகார் சிறையில் தண்டனை நிறைவேற்றப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. தண்டனை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜனாதிபதிக்கு கருணை மனுவையும் அவர் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மன்மோகன் சங்கீதா, திங்கரா செஹல் அடங்கிய டில்லி உயர் நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. 'வாரன்டில் எந்தத் தவறும் இல்லை. அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என அமர்வு கூறியது. அதே நேரத்தில் 'மனுதாரர் டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம்' என அமர்வு கூறியுள்ளது.
அப்போது டில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கூறியதாவது: தண்டனையை இழுத்தடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக நான்கு பேரும் மாறி மாறி புது மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது ஒரு குற்றவாளி தண்டனையை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கும் கருணை மனுவை அனுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் மற்ற மூவரும் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாது. ஒரே நேரத்தில்தான் நான்கு பேரின் தண்டனை நிறைவேற்ற வேண்டும். அதனால் திட்டமிட்டபடி 'ஜன. 22ம் தேதி தண்டனையை நிறைவேற்றுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமர்வு கூறியதாவது: சட்டவிதிகள் சரியாக இல்லை. இதுபோன்ற குழப்பங்கள் நடந்தால் மக்களுக்கு நீதியின் மீதான நம்பிக்கை போய்விடும். இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்ட உடனேயே கருணை மனுவை தாக்கல் செய்யும்படி ஏன் வலியுறுத்தவில்லை. அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் இத்தனை காலம் காத்திருந்து கடைசி நேரத்தில் மனுக்களை தாக்கல் செய்வது சரியல்ல. இவ்வாறு அமர்வு கூறியது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தண்டனையை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து 'டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் சார்பில் நேற்று மாலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'கருணை மனு நிலுவையில் உள்ளதால் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி டில்லி அரசுக்கும் மாணவியின் பெற்றோருக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகேஷ் சிங் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை ரத்து செய்யும்படி டில்லி அரசு பரிந்துரைத்துள்ளது. ''மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளோம். கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை கடிதத்தை துணை நிலை கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது'' என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
23 முறை விதிமீறல்:திகார் சிறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் சிறையில் இருந்தபோது நிர்பயா குற்றவாளிகள் 23 முறை சிறை விதிகளை மீறியதற்கான தண்டனையை பெற்றுள்ளனர். இதில் வினய் 11 முறை, அக் ஷய் ஒரு முறை, முகேஷ் மூன்று முறை, பவன் எட்டு முறை விதி மீறினர். சிறையில் இருந்தபோது வேலை செய்ய முகேஷ் மறுத்தார். அதே நேரத்தில் அக் ஷய் வேலை செய்து 69,000 ரூபாய், பவன் 29 ஆயிரம் ரூபாய், வினய் 39 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றனர். 2016ல் முகேஷ், பவன் மற்றும் அக் ஷய் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்; ஆனால் தேர்ச்சி பெறவில்லை, என்றனர்.
கருணை மனு நிலுவையில் உள்ளதால், நால்வரின் துாக்கு தண்டனை, திட்டமிட்டபடி நிறைவேற்ற இயலாது என நீதிமன்றத்தில் டில்லி அரசு கூறியுள்ளது. தாமதப்படுத்தும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜன. 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment