காய்கறி வாங்க குடும்பமாக வருவதா?
Added : ஏப் 05, 2020 23:42
திருச்சி : ''தனிமைப்படுதலின் அவசியத்தை உணராமல், காய்கறி வாங்கக் கூட குடும்பத்துடன் வெளியே வருகின்றனர்,'' என, திருச்சி கலெக்டர் சிவராஜ் வருத்தப்பட்டார்.
திருச்சி மஹாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில், திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 125 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தை ஒருவருக்கும், கரூரைச் சேர்ந்த சேர்ந்த, இருவருக்கும் மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம், திருச்சி அரசு மருத்துவமனையில் இருப்பவர்களில், 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்த தகவலை, நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட மாவட்ட கலெக்டர், சிவராஜ் கூறியதாவது:நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் வெளியே வருவதை குறைக்கவில்லை.
எவ்வளவு சொன்னாலும், வெளியே வருபவர்கள் கட்டுப்படவில்லை.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, தனிமைப்படுதல் மிக அவசியம். ஆனால், அதை யாரும் கடைப்பிடிக்கவில்லை; காய்கறி வாங்கக் கூட குடும்பத்தோடு வர்றாங்க. அதுவும் தினசரி வெளியே வருகின்றனர். இனி, மருத்துவம் உள்ள அத்தியாவசிய காரணம் இல்லாமல், யாரும் வெளியே வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.50 இடங்களில் தடைதிருச்சி அரசு மருத்துவமனையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேரும், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரும் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில், 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, வைரஸ் தொற்று இருப்பவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார் வசிக்கும், 50 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளாக, வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment