வீடுகளில் முடங்கிய ஆண்களால் பெண்களுக்கு மனநல பாதிப்பா
Added : ஏப் 06, 2020 00:32 |
சென்னை : 'ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என மாநில மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்யநாதன் கூறியதாவது: வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் ஆண்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு வகையில் இன்னல்களை ஏற்படுத்துகின்றனர். பொதுவாக நல்ல வேலையில் உள்ள ஆண்கள் அலுவலகத்தில் தான் சொன்னதும் ஓடி வந்து ஏவல் செய்யும் வேலையாட்களை போல தன் வீட்டில் உள்ள பெண்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அதேநேரம் வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்கள் தங்களின் தோழியரிடம் கூட பேச முடியாத நிலையில் உள்ளனர். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கான உணவு தயாரிப்பது பாத்திரம் துலக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும்செய்கின்றனர். தற்போது கணவர், மாமியார், சகோதரர், கொழுந்தன் உள்ளிட்டோரின் ஆதிக்கத்தால் அல்லாடுகின்றனர். பல இடங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை முடிவெடுக்கவும் தயங்காதவர்களாக இருப்பர். தற்போது எங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த புகார்கள்வருகின்றன. எனவே பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் '181'ஐ தொடர்புகொண்டு பெண்கள் தங்களுக்கான பிரச்னைகள் குறித்து ஆலோசனை பெறலாம், என்றார். உதவி தேவைப்படும் பெண்கள் கண்ணகி பாக்ய நாதனை 63826 49042ல் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment