மண்டபத்தை தந்த ரஜினி, வைரமுத்து
Added : ஏப் 08, 2020 22:56
சென்னை : கமல், விஜயகாந்தை தொடர்ந்து ரஜினியும், வைரமுத்துவும், அவர்களின் திருமண மண்ட பத்தை, கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஊரடங்கை தொடர்ந்து, வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சை பிரிவுகள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொடர்ந்து பரவும் பட்சத்தில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கவும், பல மாநிலங்கள் முன்வந்துள்ளன.இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல், தன் அலுவலகத்தை, கொரோனா பாதித்தவர்களுக்கு, சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என, அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான, விஜயகாந்தும், தன் கட்சி அலுவலகம் மற்றும் கல்லுாரி வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என, அறிவித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினி, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.இதற்கு முன், 2015ல், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, மக்கள் தங்குவதற்காக, திருமண மண்டபத்தை கொடுத்ததுடன், உணவும் கொடுத்தார் ரஜினி.
ரஜினியை போலவே, கவிஞர் வைரமுத்துவும், சூளைமேட்டில் உள்ள பொன்மணி மாளிகையை, அரசு பயன்படுத்திக் கொள்ளும்படி, கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment