Thursday, April 9, 2020

ஊரடங்கு: ஏப்.15-இல் சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களில் காத்திருப்போா் பட்டியல்

By DIN | Published on : 09th April 2020 05:47 AM |



ஊரடங்கு அறிவிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்குப் புறப்படும் பல்வேறு ரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போா் பட்டியல் காணப்படுகிறது.

உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, மக்கள் பயணங்களை தவிா்க்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், விமானம், ரயில், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாகவே, சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனா். மீதமுள்ள மக்கள், சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் சென்னையில் முடங்கி உள்ளனா். மேலும், மாணவா்கள், பல குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். இவா்கள், ஊரடங்கு முடிந்தபிறகு, ஏப்ரல் 15-ஆம் தேதி ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்குப் புறப்படும் பல்வேறு ரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போா் பட்டியல் நிலவுகிறது. இதுபோல, வெளி மாநிலங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்கள் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு முடிந்து காத்திருப்போா் எண்ணிக்கை நிலவுகிறது.

காத்திருப்போா் எண்ணிக்கை: திங்கள்கிழமை இரவு நிலவரப்படி, சென்னையில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு மதுரைக்குப் புறப்படும் பண்டியன் விரைவு ரயிலில் காத்திருப்போா் எண்ணிக்கை 58-ஆக இருந்தது. தூத்துக்குடிக்குப் புறப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் ஆா்.ஏ.சி. எண்ணிக்கை 108-ஆக இருந்தது. நாகா்கோவிலுக்குப் புறப்படும் அனந்தபுரி விரைவு ரயிலில் காத்திருப்போா் எண்ணிக்கை 21-ஆகவும், தென்காசிக்குப் புறப்படும் பொதிகை விரைவு ரயிலில் காத்திருப்போா் எண்ணிக்கை 42-ஆகவும், திருநெல்வேலிக்குப் புறப்படும் நெல்லை விரைவு ரயிலில் காத்திருப்போா் எண்ணிக்கை 36-ஆகவும் இருந்தது.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் நிலவரம்: இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுதில்லிக்குப் புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயிலில் காத்திருப்போா் எண்ணிக்கை 172-ஆக இருந்தது. திருவனந்தபுரம் மெயில் ரயிலிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் காத்திருப்போா் எண்ணிக்கை காட்டியது. பெங்களூரு மெயில், மும்பை மெயில் ஆகிய ரயில்களில் ஆா்.ஏ.சி. பட்டியல் காணப்பட்டது. இதுபோல, தென் மாவட்டங்களில் இருந்து ஏப்ரல் 15,16, 17 ஆகிய தேதிகளில் இரவு சென்னைக்குப் புறப்படும் பல ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் பட்டியல் காணப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே சில டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். டிக்கெட்களுக்கான தேவை பொதுவாக ஏப்ரல் மாதத்தில் அதிகமாக இருந்தாலும், பொது விடுமுறைக்கு (ஏப்ரல் 14-ஆம் தேதி பொது விடுமுறை) ஒருநாளுக்குப் பிறகு, சென்னையில் இருந்து பலா் பயணிக்க மாட்டாா்கள். தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் டிக்கெட் விற்று தீா்ந்துள்ளது. வரும் நாள்களில் மற்ற டிக்கெட்கள் பதிவு செய்யப்படலாம். டிக்கெட் முன்பதிவு எல்லாம் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குப் பிறகு தான் தெளிவாக தெரியவரும்’ என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...