மருத்துவ ஆய்வுக்கு ஊக்குவிப்பு இல்லை
Added : ஏப் 09, 2020 00:26
சென்னை : 'மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்குவதில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் மாதேஸ்வரன் தாக்கல் செய்த மனு:'கொரோனா வைரஸ்' கிருமியை கட்டுப்படுத்த சஞ்சீவி மூலிகை கூறுகளால் மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கிறேன். இந்த மருந்து குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கிறேன். அவர்கள் முன் ஆஜராகி பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் கிருபாகரன் ஹேமலதா அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி ''ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழு முன் மனுதாரர் முறையிடலாம்'' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் சிறந்த மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இருந்தாலும் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிக்கும் மத்திய மாநில அரசுகள் உரிய ஊக்குவிப்பு அளிப்பது இல்லை; போதிய நிதியும் ஒதுக்குவது இல்லை.தடுப்பு மருந்துகளை பொறுத்தவரை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறையில் மருந்துகள் உள்ளதா என்பதை ஏன் ஆய்வு செய்யக் கூடாது? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இவ்வழக்கில் மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஆயுஷ் துறையையும் சேர்த்து பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment