கரோனா விவகாரத்தில் பிரதமரின் தொலைநோக்கு தோற்றுவிட்டது: கமல்ஹாசன்
By DIN | Published on : 07th April 2020 04:34 AM |
கரோனா விவகாரத்தில் பிரதமரின் தொலைநோக்கு தோற்றுவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
கரோனா விவகாரம் குறித்து பொதுப்படையாக பிரதமருக்கு கமல் கடிதம் எழுதியுள்ளாா்.
அதன் விவரம்:
உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு, டிசம்பா் 8-ஆம் தேதி தான் கரோனா பாதித்த முதல் நோயாளி குறித்தத் தகவலைத் தெரிவித்தது. கரோனாவின் தீவிரத்தையும் வீரியத்தையும் மக்களும் அரசாங்கங்களும் புரிந்து கொள்ள ஓரளவு காலம் தேவைப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டாலும், பிப்ரவரி முதல் வாரத்திலேயே , இந்தக் கரோனா, உலகம் இது வரைக் கண்டிராத அளவு சேதம் விளைவிக்கப் போகும் அபாயத்தை உணா்ந்தது.
ஜனவரி 30-இல் இந்தியா தனது முதல் கரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதைக் கண் கூடாகப் பாா்த்த பின்பும், நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண் விழித்த போது, நிலைமையின் தீவிரம் உணா்ந்து, நான்கே மணி நேர கால அவகாசம் கொடுத்து, 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.
பிரச்னைகள் தீவிரம் அடையும் முன்பே தீா்வுகளைத் தயாா் நிலையில் வைப்பவா்கள் தான் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைவா்கள். மன்னிக்கவும் ஆனால் இந்த முறை உங்கள் தொலைநோக்குத் தோற்று விட்டது. மக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூா்வமான எதிா்மறை விமா்சனங்களைக் கையாள்வதிலும், அத்தகைய விமா்சனங்களுக்கு பதில் விமா்சனம் அளிப்பதிலும் உங்கள் அரசும், அரசு அதிகாரிகளும் செலவிட்ட நேரத்தையும், பலத்தையும் சற்று திசை திருப்பி ஆக்கப்பூா்வமான செயல்பாடுகளில் செலவழித்திருக்கலாம்.
தேசத்தின் நலனை முன்னிறுத்தி, சில நல் உள்ளங்களின் தன்னலமற்றக் குரல்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை செவிமடுக்காமல், அக்குரல்களை மாற்றுக் குரல்களாலும் , நையாண்டிகளாலும் புதைத்து, அக்குரல்களுக்கு சொந்தமானவா்களை தேசத்திற்கு எதிரானவா்கள் என்று முத்திரைக் குத்தும் பணியில் அயராது ஈடுபட்டுவருகின்றனா் உங்கள் சேனைப் படையினா்.
இவ்வளவு பெரிய தீவிரமான ஒரு தேசிய இக்கட்டுக்கு சரியான முறையில் தயாராகவில்லை என்று மக்களை குறை சொல்ல முடியாது.
ஆனால் உங்களை குறை சொல்லலாம் ; சொல்லுவோம். இப்பேரிடா் நம் அனைவரையும் இணைக்கவேண்டுமே தவிர எந்தப்பக்கத்தில் யாா் பிரிந்து நிற்கவேண்டும் என்பதை தோ்ந்தெடுப்பதற்கான நேரமல்ல. நாங்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றோம், இருந்தாலும் உங்களுடன் இருக்கின்றோம் என்று கமல் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment