ஊரடங்கு பிசுபிசுப்பால் சுகாதார துறை கலக்கம்
Updated : ஏப் 02, 2020 00:34 | Added : ஏப் 01, 2020 22:54
சென்னை : ஊரடங்கு அமலாகி, ஒரு வாரம் மட்டுமே கடந்த நிலையில், பிசுபிசுக்கும் நிலைக்கு வந்துள்ளது. சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சுகாதார துறையினர் கவலை அடைந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவித்த, மார்ச், 24 முதல், அனைத்து மாநிலங்களிலும், அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வெளியே வராமல், வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
முதல் நாளில், பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்காமல், வெளியே சுற்றினர். போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததும், வீட்டில் முடங்கினர். இந்நிலையில், அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்வோர், அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும், அனுமதி சீட்டு பெறலாம் என, அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து, சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடை வீதிகளில், மக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தவிர, அரசின் நிவாரண உதவி பெறுவதற்கு, 'டோக்கன்' வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இந்த டோக்கனை பெறவும், கூட்டம் கூடத் துவங்கியது.
சமூக இடைவெளி இல்லாமல், பொது மக்கள் நெரிசலில் நிற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, ஊரடங்கு பிசுபிசுத்து விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்தால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் அச்சம் அடைந்துஉள்ளனர்.
No comments:
Post a Comment