Saturday, May 2, 2020

களமாடிய அதிகாரிகள்... காணாமல்போன கொரோனா!



நீலகிரி

நம்பிக்கையூட்டும் நீலகிரி, ஈரோடு, கரூர்

சென்னையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறும் நிலையில், கொரோனாவைத் துரத்தியடித்து பெரும்நம்பிக்கை அளித்திருக்கிறார்கள் நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்ட அதிகாரிகள்.

மத்திய அரசால் முதன்முதலில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு. தாய்லாந்து நாட்டினருடன் ஏற்பட்ட தொடர்பால் பாதிக்கப்பட்ட 70 நபர்களில் ஒருவர் மட்டும் உயிரிழக்க, மீதம் இருந்த 69 பேரும் பூரண குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர். ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து புதிதாக ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ்கூட ரிப்போர்ட் ஆகவில்லை.


சவுண்டம்மாள் - கதிரவன் - இன்னசென்ட் திவ்யா

கலெக்டர், சுகாதாரத் துறை இணை இயக்குநர், எஸ்.பி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை என இரவுபகல் பாராமல் களத்தில் நின்ற பலருக்கும் இந்த பாசிட்டிவ் எனர்ஜி உண்டானதில் பெரும் பங்கிருக்கிறது.

சிறப்பான சிகிச்சை, கவனிப்பால் 69 பேரையும் தொற்றிலிருந்து மீட்கப் போராடினார் ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள். மூன்று ஏக்கரில் நெரிசலாக இருந்த மார்க்கெட்டை, 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றினார் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன். மாவட்டத்தில் இருந்த 13 செக்போஸ்ட்டுகளை 135 ஆக அதிகப்படுத்தி, ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கே வர மாட்டேன் என்று சொன்ன பலரிடம் பேசி வரவழைத்து, சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, குணமானதும் பழக்கூடையுடன் அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார் கலெக்டர் கதிரவன்.

உவகைகொள்ளும் உதகை!

சர்வதேச சுற்றுலா நகரம், கேரளா, கர்நாடக மாநில எல்லைகளை உள்ளடக்கிய மாவட்டம் என நீலகிரிக்கு கொரோனா தொற்று வருவதற்கான வழிகள் நிறைய இருந்தன. அப்படியெல்லாம் உள்ளே வராத கொரோனா, டெல்லி சென்று திரும்பிய எட்டு நபர்களில் நால்வர் மூலமாக என்ட்ரி ஆனது. அடுத்த சில நாள்களில் மேலும் ஐந்து பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் ஆண்கள்.

இந்த ஒன்பது நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 30 பேரை தனிமையில் கண்காணித்து வந்தனர். இத்துடன் வெளிநாடு சென்று திரும்பிய 1,471 நபர்களின் வீடுகளுக்கு சீல் வைத்து கண்காணித்துவந்தனர். ஏப்ரல் 27-ம் தேதி மாலை கடைசி நபரும் நலமாகி வீடு திரும்ப, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழகத்தின் முதல் மாவட்டமாக நீலகிரி பெயர்பெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்மிடம், ‘‘இந்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க தொடர்ந்து மக்கள் ஒத்துழைத்து விழிப்புடன் இருக்க வேண்டுகிறோம்’’ என்றார்.

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கடைசி கொரோனா தொற்று பாதித்த நோயாளியும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால், கரூர் ஜீரோ கொரோனா மாவட்டமாக மாறியிருக்கிறது.

அனைத்து அதிகாரிகளுக்கும், ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024