`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - அதிர்ச்சி கொடுத்த பிரேதப் பரிசோதனை ஆய்வு
பயிற்சி டாக்டர் பிரதீபா
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவியும் பயிற்சி டாக்டரும் பிரதீபாவின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா (22). இவர், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர். இவரின் அப்பா ரமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்திவருகிறார். இந்தநிலையில் நேற்று கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணி முடிந்து விடுதி திரும்பிய பிரதீபா, சடலமாக விடுதி அறையிலிருந்து மீட்கப்பட்டார்.
அப்பாவுடன் பிரதீபா
அவரின் மரணம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். கொரோனாவால் பயிற்சி டாக்டர் பிரதீபா மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிந்தது. இதையடுத்து பிரதீபாவின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரதீபா எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு பிரேதப் பரிசோதனையில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் பிரதீபா தங்கியிருந்த அறை மற்றும் அவரின் செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் பிரேத பரிசோதனை முடிந்து பிரதீபாவின் சடலம் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு பிரதீபாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டதற்கு, பொதுவாக பிரேத பரிசோதனை செய்யும்போதே இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும். ஆனால், பிரதீபாவின் பிரேதப் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அவரின் சடலத்திலும் எந்தவித காயங்களும் இல்லை. இருப்பினும் அவரின் உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப்பிறகே பிரதீபாவின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்"என்றனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பயிற்சி டாக்டர் பிரதீபா, பூட்டிய அறைக்குள் இறந்துகிடந்தார். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினோம். ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பிரதீபாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள், பிரதீபாவுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எந்தவித பிரச்னையும் இல்லை என்றே தெரிவித்தனர்.
பிரதீபா தொடர்பான பதிவு
மேலும், பிரதீபா தூங்கச் செல்வதற்கு முன்புகூட செல்போனில் பேசியுள்ளார். அப்போது வேலை தொடர்பாக சில தகவல்களை மட்டுமே கூறியுள்ளார். மற்றப்படி வழக்கம் போல அவர் பேசியுள்ளார். இதனால்தான் பிரதீபாவின் மரணத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
பிரதீபாவின் தோழிகளிடமும் விசாரித்தபோதும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை. அதனால் பிரேதப் பரிசோதனையின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``பிரதீபாவின் குடும்பத்தினர் சோகத்தில் இருந்ததால் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. பிரதீபாவின் இறுதி அஞ்சலி முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது பிரதீபாவின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் தோழிகளிடம், குட் நைட் என்று கூறிவிட்டு தனியறையில் தூங்கச் சென்ற பிரதீபா, காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம்
அவரின் மரணத்தில் காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம் தெரிந்துவிடும். பிரதீபாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறிய தகவலின்படி அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றார்.
No comments:
Post a Comment