ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம்: தெலுங்கானாவில் அவசர சட்டம்
Updated : ஜூன் 18, 2020 02:11 | Added : ஜூன் 18, 2020 02:10
ஐதராபாத்: கொரோனா வைரஸ் பாதிப்பால், சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக, தெலுங்கானாவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கொரோனா ஊரடங்கால், மாநில நிதி நிலைமை பாதிக்கப்பட்டதையடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக இயற்றப்பட்ட, 'தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020' சிறப்பு சட்டத்திற்கு, மாநில கவர்னர், தமிழிசை சவுந்தரராஜன், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, இச்சட்டம் மார்ச், 24 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கால கட்டத்தில், நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment