Friday, November 6, 2020

கட்சி துவங்கும் விவகாரம்: தந்தை'காமெடி'- தனயன் சரவெடி

கட்சி துவங்கும் விவகாரம்: தந்தை'காமெடி'- தனயன் சரவெடி

Updated : நவ 05, 2020 23:36 | Added : நவ 05, 2020 23:27

மாப்ளை அவர்தான்; ஆனா, சட்டை அவரோடது இல்லை : நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் 'காமெடி' : தந்தைக்கு எதிராக தனயன் சர வெடி

சென்னை,:அரசியல் கட்சி துவங்கும் விஷயத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அவர் மகனும் நடிகருமான விஜய்க்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நேற்று பகிரங்க மோதலாக வெடித்தது.விஜயின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக்க முயன்ற இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் கடும் எதிர்ப்பு காட்டினார்.தந்தையின் அரசியல் கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன் பெயர் படம் இயக்கத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜய் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.நடிகர் ரஜினிக்கு அடுத்து திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய்.

விஜய்க்கு இருக்கும் ரசிகர் பலத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி துவங்கி அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது எஸ்.ஏ.சந்திரசேகரின் நெடுங்கால விருப்பம்.இதற்காகவே பல ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி அதன்மூலம் நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் வழங்குவது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.ஆயினும் இதை தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளுமே விரும்பவில்லை. இதன் காரணமாகவே விஜயின் காவலன் பட வெளியீட்டிற்கு அன்று கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க. அரசு நெருக்கடி கொடுத்தது.

இந்த அதிருப்தியில் இருந்த விஜய் 2011 சட்டசபை தேர்தலில் தன் தந்தையின் ஆலோசனைப்படி 'மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்' என அறிவித்தார்.இதற்கு பிரதிபலனாக தனக்கு விருகம்பாக்கம் தொகுதியில் சீட் வேண்டும் என சந்திரசேகர் கேட்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'நோ' என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.ஏமாற்றத்தில் உடைந்து போனார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தேர்தலில் ஜெயலலிதா வென்றதும் 'இந்த வெற்றிக்கு விஜயின் மக்கள் இயக்கமும் அணிலாக உதவியது' என எஸ்.ஏ.சந்திரசேகர் கூற விஜயகாந்த் கூட்டணியால் வெற்றி கிட்டியது என்பதையே ஏற்காத ஜெயலலிதா இதை மனதின் ஓரத்தில் பதிய வைத்து கொண்டார்.இதையடுத்து விஜயின்தலைவாபடத்தில் 'டைம் டு லீட்' என்ற துணைத் தலைப்பு வைக்கப்பட்டது. அதைக் கண்ட ஜெயலலிதா ஆக்ரோஷம் அடைந்து படம் வௌியாவதற்கு 'கட்டை' போட்டார். ஒருவழியாக ஜெயலலிதாவிடம் 'சரண்டர்' ஆகி படத்தை வெளியிட்டனர்.அதன்பின் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மவுனமாக இருந்த சந்திரசேகர் அவர் மறைவுக்குப் பின் விஜய்க்கு அவ்வப்போது அரசியல் துாபம் போட்டபடி இருந்தார்.அதற்கு விஜய் பிடி கொடுக்காமல் நழுவி வந்தார். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினார். படத்திற்கு படம் அவரது சம்பளமும் கோடிகளில் எகிறியபடி இருந்தது.

தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி ஒதுங்கி விட கமல் மட்டும் களத்தில் குதித்துள்ளார். ரஜினி வராத வெற்றிடத்தை விஜய் கட்சியை இட்டு நிரப்பலாம் என சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார்.இதனால் அதிரடியாக 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளார்.இதற்கான விண்ணப்பத்தில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் 'டுவிட்டரில்' ஒரு தகவல் வெளியிட்டார். அதில் கூறப்பட்டதாவது:இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது.என் தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக என் ரசிகர்கள் அவர் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.மேலும் என் பெயரையோ படத்தையோ என் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

தன் மகனிடம் சொல்லாமலேயே துவக்கப்பட்ட கட்சிக்கு மகன் எப்படியும் சம்மதம் தெரிவிப்பார் எனக் கருதிய சந்திரசேகருக்கு இது கடும் அதிர்ச்சியை அளித்தது.'சட்டை கிழிஞ்சிருந்தா... தைச்சு உடுத்திரலாம்; நெஞ்சு கிழிஞ்சிருச்சே... எங்கே முறையிடலாம்' என பாடாத குறையாக விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார்.இதனால் 'என் கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை' என அவர் அறிவித்தார்.

ரஜினி சினிமா பட காமெடி போல் 'மாப்பிள்ளை அவர் தான்; ஆனால் அவர் போட்டுள்ள சட்டை அவருடையது இல்லை' என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதுவரை கட்சி துவங்குவது தொடர்பாக தந்தை மகன் இடையே வீட்டுக்குள் மட்டும் நடந்து வந்த பனிப்போர் தற்போது பகிரங்க மோதலாக வெடித்து விட்டது.இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினாலும் விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் தற்போதைக்கு வௌிவராத குறையைப் போக்க நேற்றைய சம்பவம் விஜயின் ஒரிஜினல் படத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தி விட்டது!
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற நிஜ காமெடி காட்சிகளை இனி அடிக்கடி பார்க்கலாம்!

மோதலின் பின்னணியில் ஜோதிடர்கள்

நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே ஜோதிடர்களால் மோதல் உருவானதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூறியதாவது:நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஜோதிடம் வாஸ்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். சமீபத்தில் விஜய் நண்பர்கள் சிலர் டில்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவரிடம் விஜய் ஜாதகத்தை காண்பித்துள்ளனர்.
'குருபெயர்ச்சிக்கு பின் ஆறு மாதங்களில் தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்கும் விபரீத ராஜயோகம் உள்ளது. இந்த அதிசயம் நடக்கும்' என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.இதையறிந்த எஸ்.ஏ.சந்திரசேகர் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்க திட்டமிட்டு தேர்தல் கமிஷனில் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார்.

அடுத்ததாக கட்சியின் பெயர் கொடியின் நிறம் கட்சி துவக்குவதற்கான தேதியை குறித்து தரும்படி கோரி விஜய்க்கு நெருக்கமான கடலுார் மாவட்ட ஜோதிடரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்தனர்.அந்த ஜோதிடரோ 'தற்போது விஜய் அரசியலில் குதிக்க வேண்டாம். அவருடைய பூசம் நட்சத்திரத்தால் பணம் உழைப்பு எல்லாம் விரயமாகி விடும்' என கூறியுள்ளார்.

இதையடுத்து 'என் பெயரில் கட்சி துவக்க வேண்டாம். 2026ல் சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்' என தந்தையிடம் விஜய் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பிடிவாதமாக இருந்து மகனின் பேச்சை மீறி கட்சிக்கான அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார்.தந்தை - மகன் இருவருக்கும் இடையே ஜோதிடர்களால் மோதல் உருவாகி திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024